எனக்குப் பிடித்த இம்சை I

கிழிக்கப்பட்ட தாள்களுடன்
கவிதைப் புத்தகத்தின் சில பக்கங்களும்
தலைப்பு வேறாக கவிதை வேறாக
இறைந்து கிடக்கும் என் அறையெங்கும்

எத்தனை முறை சுத்தப் படுத்தினாலும்
வீடு வீடாக இருப்பதில்லை
தனக்கு வேலை தீர்வதேயில்லை என
புலம்பும் மனைவிக்கு ஓய்வேயில்லை

எண்ணங்களைப் பதிக்கின்றபோது நடக்கும்
வார்த்தை தேடல்களின் நடுவில்
எழுதிக் கொண்டிருந்த எழுதுகோலையும்
சில நேரம் தேடிப்பிடிக்க வேண்டியதிருக்கும்

அந்தத் தேடலில்
சிந்தனையும் கைக்கெட்டாது போய்விட
முற்றுப்பெறாத கவிதையினையே
திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டியிருக்கும்

பெரும்பாலான நேரங்கள்
நானும் குழந்தையாக வேண்டியதிருக்கும்
குறைகளை தவறுகளை தீர்க்க
பஞ்சாயத்து செய்ய வேண்டியதிருக்கும்

இலக்கியத்தை அறியாதவர் வீடுகளில்கூட
பல இலக்கியப் புத்தகங்கள்
என் அனுமதியின்றி கொடுக்கப் பட்டிருக்கும்
இலவசமாய் வந்ததென பாதுகாக்கப்பட்டிருக்கும்

அலுவலகம் கிளம்புகையில்தான் தெரியும்
மடித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகள்
கலைக்கப்பட்டிருப்பதையும்
ஆங்காங்கே கைக்கறைகள் அப்பியிருப்பதையும்

அலுவலகம் கிளம்பும்போது
வழிமறித்தபின் என்னை அனுப்பினால்தான்
எனக்கு அன்றைய பொழுது அங்கே
நன்றாக நடக்கும்

நான் வீட்டிலிருந்தால்
தனக்கு தலைவலியென நினைக்கும்
என் மனைவி இன்று
நிம்மதியாக இருப்பதை அறிய முடிந்தது

ஓய்வுக்கெனவே ஒதுக்கப்பட்ட
இந்த ஞாயிறு
எதோ ஒரு குறையால்
நிரம்புவதை என்னால் உணர முடிந்தது

அடுக்கப்பட்ட புத்தகங்களும் ஆடைகளும்
கலையாதிருப்பதும்
தற்சமயம் வந்து போன உறவினர்
அமைதிக்கு கொடுத்த சான்றிதழும்

என்னுடைய தனிமையின் விரிவாக்கமும்
மிகவும் சலனப்படுத்தின
கூச்சலும் குழப்பமும் இல்லாத வீடு
என்னை அச்சுறுத்தியது

பக்கத்து வீடு பூட்டப்பட்டிருந்ததை அறிந்து
விசாரித்ததில் கிடைத்த செய்தி
என்னை இம்சைப் படுத்தும் சுட்டிக்குழந்தை
ஊருக்குப் போய்விட்டாளாம்

எப்போது திரும்புவாளெனும் ஏக்கத்துடன்
எனக்குள்ளிருந்த குழந்தையை தொலைத்து
நடை தளர்ந்த வயோதிகனாய் திரும்பினேன்
வெறுமை ஆக்கிரமித்த என் வீட்டிற்குள் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (27-Mar-13, 5:46 pm)
பார்வை : 113

மேலே