அனாதை
ஐந்து ரூபாய்
எல்லோரும் எக்ஸ்கர்ஷனுக்கு ஐந்து ரூபாய் எடுத்துட்டு வந்துடுங்க! நாளைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு கூப்பன் தருவாங்க. அதை நீங்க நிரப்பி வைச்சுக்கங்க. நாம போற இடத்தில அதை காமிச்சாத் தான் உள்ளே விடுவாங்க.
சரி!சரி! என மண்டையை ஆட்டியபடி தனது டவுசரை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டான் சீனி.
படிப்பு கற்பூரமாய் ஓட்டைபுத்தகப்பையை நிறைத்தாலும் சரஸ்வதி குடியிருக்கும் வரத்தை அவன் தந்தை இளைய தாரம் மோகத்தில் பையன் இருப்பதை மறந்து தான் போனார்.வளர்த்த பாட்டி அப்பாவிடம் வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் சோறு போட்டதும்,காசு வரவில்லையெனில் புத்தகத் தகரப் பெட்டியை வீசியதும்,ரோட்டுக்கால்வாயில் பொறுக்கியதும், படிப்புக்கு விளக்கு அளிக்க மறுத்த நெஞ்சங்களும் அவன் கண்ணில் நிழலாடியது
அனாதை போல் கிடந்தவனை அள்ளி எடுக்க ஆளின்றி ரோட்டில் ஒருவர் பள்ளியில் சேர்த்து விட்டுச் சென்று விட்டார்.
டீக்கடை பன்னும்,வானத்திலிருந்த தாயின் ஆசியும் பத்தாம் வகுப்பின் இறுதியைத் தொட வைத்தன.
யாரிடம் ஐந்து ரூபாய் கேட்பது! சித்தி கேட்டாலே விளக்குமாறு என்பாள்! இனி என்ன செய்யலாம் என யோசித்தான்.பாலிடெக்னிக் வேறு அடுத்த வருடம்.ஹூம்!மறந்தும் இனி அப்பாவிடம் யாசகம் கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான் சீனி.
. படிப்பு குதிரைப்பந்தயமாய் அவன் கண்ணை விரட்ட எக்ஸ்கர்ஷன் போக வேண்டாம் என முடிவெடுத்தான்.வரைந்த அம்மா படம்செதில்பட்டையாய் உரிந்து போன ஆலமரப்பட்டைக்கு வலிக்குமென ஆணி அடிக்காமல் பையின் கிழிந்த கைப்பிடித்துணியை இறுகக் கட்டி வைத்திருந்த இடத்திற்குச் சென்றான்.
அரவிந்தம்மா போலவே இந்த அம்மாவும் என்கூடவே பேசாமலே சிரிச்சுக்கிட்டே இருக்காங்களே! பேசேம்மா! என்ற அந்தக் குழந்தை உள்ளம் ஊமையாய் அழுதது.வானத்துக் கதிரவனுக்கும் அவனது உள்ளத்து அழுகை கேட்டதோ! என்னவோ!
சீனி! என்ற குரல் கேட்டு டக்கென தூக்கத்திலிருந்து விழித்தான் சீனிவாசன்.
வாசல்ல நிறைய பத்திரிகையாளர் நிறைய பேர் காத்திட்டிருக்காங்கப்பா! நீ அனைாதைகளுக்கான ஆஸ்ரமம் நடத்தி ரொம்ப சிறப்பா செய்யறதா யாரோ சொல்லி வந்திருக்காங்கஎன்னவோ உலக அளவுல அவார்ட் வந்ததா பேசிக்கிறாங்க என்றபடி படிப்புக்கு விளக்கை அணைத்த சித்தப்பா கம்பு ஊன்றியபடி சொல்லிப்போனார்.
சுவரில் செதில்பட்டையுடன்கூடிய மதர் படமும், அம்மாவின் படமும், உழைப்பாளர் சிலையும் அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.