ஒரு கணம் சிந்தியுங்கள்.!
ஒரு கணம் சிந்தியுங்கள்.!
இனியென்ன இருப்பது எல்லாமே முடிந்ததென
---- தோன்றும் பொழுதிலொரு கணம்
நுனிமுனை துணிந்து மறுவழி என்னென்று
----- தேடிடச் சிந்தனைக்குக் கொஞ்சம்
பனியளவனுமதித்து ஆலோசிக்க விடுங்கள்.
----- பாதை யில்லா ஊர்களே இல்லை.
கனிவருமா காய்வருமா வெனக் காத்திருங்கள்.
----- காலம் யாரையுமே கை விடுவதில்லை.
உயிரென்பது விலைக்கு வாங்கும் பொருளோ!
-------- போனாலது மறுமுறை வருமோ!
மயிரோவது மழித்தலும் நீட்டலும் செய்வதற்கு!
------- மரணந் தேடுத்ல் கோழைத்தனம்..
வயிறொன்று தானே வாழ்ந்திடப் பிரச்சனை
------ விலங்கைவிடக் கேவலமா மனிதன்!
தைரியம் வேண்டும் தற்கொலைகள் வேண்டாம்.
------ வாழ்வதை வாழ்ந்து விட்டுப் போவோம்.
வறுமைக்குப் பயந்து வாழ்ந்திட மறுப்பதோ!
---- வகைகாணாது வாழ்வை முடிப்பதோ!
பொறுமை யிழந்த உணர்ச்சி வெளிப்பாட்டால்
----- பூமியினீங்கி விடுதலை பெறுவரோ!
பிறர்க்கு மிங்கே யுரிமை காண்பதாரோ!
---- தனக்கே தேடுதல் சுயநலமன்றோ!
இறப்பே யெதற்கும் விடையெனக் கொண்டால்
----- எதிரியை வென்றிட இருப்பார் யாரோ!
கவிஞர் கொ.பெ.பிச்சசையா.