என்றும் உறவாடுவேன் தமிழோடு...

மொழி எந்தன் தமிழ் மொழி,
மூவுலகும் வளர்த்த மொழி..

தேனள்ளிப் பருகி விடின்,
திகட்டுஞ்சுவை தந்திடுமே..
எந்தமிழள்ளி நுகருகையில்,
தேன் கூட கசந்திடுமே..

மொழி எந்தன் தமிழ் மொழி,
அள்ளக் குறையா இன்மொழி..

சங்க காலச் சமயங்களில்,
அங்கிருந்த வீதிகளில்,
எம் சிங்கத் தமிழ் நடை பயில,
புலவர், அவர்தம்
அங்கம் எரித்து வளர்த்தனர்..

மொழி எந்தன் தமிழ் மொழி,
சொல்லில் நயம் காட்டும் செம்மொழி..

'ழகரம்' அணிந்த பெண்ணிவள்,
நாடு நகரக் கோடுகள் எல்லையில்லை..
அகர முதல எழுத்தைக் கொண்டு,
சிகரம் தொட்ட மொழியெம் மொழியாம்..

மொழி எந்தன் தமிழ் மொழி,
செழிப்பில் திளைக்கும் வண்டமிழ் மொழி..

தேடும் திசையெங்கும் தமிழ் மொழி நிறைந்திடவே,
நாடும் உள்ளம் நற்றமிழில் நனைந்திடவே..
வீடும், காடும், உறைவிடம் எதுவாயினும்,
ஓடும், உறையும் தமிழுதிரம் தானே..

மொழி எந்தன் தமிழ் மொழி,
உணர்வில் நிறைந்த உயிர் மொழி..

செங்குருதி சிரம் தெறிக்க,
சேர சோழன் ஆண்ட பூமி,
செஞ்சூரியன் உதயம் போல,
எஞ்செம்மொழி வளர்ந்தது நாளும் பொழுதும்..

மொழி எந்தன் தமிழ் மொழி,
தடை நீங்கி ஓங்கும் வீரமொழி..

எம் பேச்சின் மொழியல்ல,
உயிர் மூச்சின் மொழியாம்,
மெய் விட்டு எம்முயிர் பிரிந்த போதிலும்,
தமிழுயிர் கொண்டு வாழ்வேன் எந்நாளும்..

மொழி எந்தன் தமிழ் மொழி,
என் தேகமோடும் உயிர் வளி..!!

எழுதியவர் : பிரதீப் (6-Apr-13, 7:46 pm)
பார்வை : 210

மேலே