சித்திரை தமிழ் புத்தாண்டே நீ யென்ன கொடுப்பாய்?
சித்திரை தமிழ் புத்தாண்டே நீ யென்ன கொடுப்பாய்?
வருடம் தவறாமல் விருந்துக்கு வந்து
முப்பத்தொரு நாள் ஓய்வெடுக்கும் – கன்னி தமிழின்
மூத்த மகளே, யென் சித்திரை மகளே..
விருந்துக்கு வரும் நீ யென்ன கொடுப்பாய்?
புத்தாண்டு வாழ்த்து நாம் சொல்ல
புது வேட்டி சேலை துண்டு இலவசமாக தருவாயா
மெய்யில் வீரமுனை புது தமிழனில் மழுங்க
பொய்யாகி போனதம்மா விவசாயம் இங்கே!
உடல் தாக வேட்கைக்கு இளநீரை
இலவசமாக எங்களுக்கு தருவாயோ – அன்றி
பனைமர நொங்கை பறித்து தான்
பக்குவமாக உரித்து தருவாயோ!
மூத்த மகளே, யென் சித்திரை மகளே
நீ என்ன கொடுப்பாய்? நீ யென்ன கொடுப்பாய்?
பகல் காற்றை சுடாமல் தருவாயோ
இரவு குளிரை மின்சாரமின்றி தருவாயோ
தர்பூசணியும் குளிர் நீரும் தாண்டவமாட
சாலைகளின் ஓரத்தில் கூப்பாடு போடுவாயோ!
மூத்த மகளே, யென் சித்திரை மகளே
நீ என்ன கொடுப்பாய்? நீ யென்ன கொடுப்பாய்?
எதை கொடுத்து என்ன பயன் – சித்திரை மகளே
என் மக்களுக்கு இலவசமாக நீ தருவதென்ன?
இனாமென்றால் நாங்கள் இதயம் தருவோம்
இரண்டு ரூபாயென்றால் உசிரையும் சேர்த்து தருவோம்!
மூத்த மகளே, யென் சித்திரை மகளே
நீ என்ன கொடுப்பாய்? நீ யென்ன கொடுப்பாய்?
புத்தாண்டு பரிசாக இன்றொரு நாள் இலவசமாயின்
குறையா வரிசையில் எம் மக்கள் சாராய கடைகளில்
ஒன்று மட்டும் உண்மை யென் மகளே - இந்த
உடல் மண்ணுக்கு! உயிர் இலவசத்துக்கு!
நீர் தர மறுக்கும் அண்டை மொழி காரனுக்கு
தாராளமாக தரமான மின்சாரம் தருவோம்
எங்கள் வாசலுக்கு இனி வந்தின்
இனாமான இலவசத்துடன் வா மகளே!
நன்றி
வாழ்க வளமுடன்
ரா.சிவகுமார்