சாரல் காலம்

தொடுவாய்... தொடுவாய்
எனத் தொட்டுவிட
எத்தனிக்கும் தொடர் மழையை
துரோகிக்கிறது உன்
கைக்குடை...........

பூக்களும் சிறகுகள்
வேண்டி
பிரார்த்திருக்கக் கூடும்
நீ கடந்து போகும்
பூந்தோட்டங்களில்.....

மார்கழிக் காலை.....
தலை கவிழ்ந்து
விரல் மறைத்தமௌனப்
புன்னகைகளோடு நீ
கடந்து போகும் நிமிடங்களுக்கு
உருவகங்கள் தேடுகிறேன்
நான்....

இரவு உணவுத்
தும்மலினூடே
"யாரோ நினைக்கிறார்கள்"
என்று சொல்லி
தலை தட்டும் நண்பனுக்கு
உன்னைத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....

அழுகையினூடே காதலைச்
சொல்லி
பிரிந்து போகக் கெஞ்சும்
பெண்ணவளின்
கண்ணீர்த்துளி
தெளிவித்துப் போகிறது
வாழ்க்கை யெனப்படு "வதை".....

அகத்திணைகளும்
மௌனித்திருக்கச்
சம்மதிப்பதில்லை
சில
உயர்திணைகளின்
சல்லாபங்களின் போது.....

கல்லையும் மண்ணையும்
வதைத்துக் குழைத்து
வடிவேற்றி
வீடென்னும் பெயர்சூடிப்
புதைகிறோம்..
உயிரோடு பிணங்களாய்.....

ஓடுமழை சேர்த்த
ஒற்றை மணற் குவியம்
உற்றுப் பார்க்கையில்
திருப்பியறைந்து
கிழிக்கிறது
தீந்தமிழ் மறந்து போன
என்
சூழ்நிலை முகத்திரைகளை..

(இவைகள் நான் எழுதிய சில சிறுகவிதைகள் )

எழுதியவர் : சரவணா (16-Apr-13, 12:28 pm)
பார்வை : 159

மேலே