பிரபஞ்ச சதியோடு போரிடும் ஓரினம் பற்றியது

இருள் குடித்து மவுனப் போதையிலிருந்தது பூமி
நிலவும் தள்ளாடியிருக்க வேண்டும் நட்சத்திரங்களோடு.
தூங்கியெழ,
துள்ளிச் சிரிக்க
தாங்கி நின்ற தாய் மண் முற்றம்
பற்றியெரிந்தது பாழ்பட்ட பகைவனால்.
செம்மணி
வங்காலை
முள்ளிவாய்க்கால்
. . . . . . . . . . . . . . . .. .. என
பூர்வீகப் புறாக்களை வந்தேறிய பூனைகள்
வாய்க்கு ருசியாக்கும்
வரலாறுகள் எம் மண்ணின் தொடர்கதை.
துன்பத்தில் தோய்த்து தூர்வாரப் பார்க்கிறது
எங்கள் சுதந்திர நதியை
பிரபஞ்ச சனியன் .
அட பைத்தியத் தமிழனே !
மாயக் கனவுகளில் மாய்ந்து போகிறதே
உயிர் நெய் ஊற்றிப் பற்ற வைத்த விடுதலை வேள்வி
நெஞ்சத்தில் எரியும் வன்மம் அணையாமல் பார்க்க வேண்டும்
குரலெதுவும் கேளாத பெருவெளியில் அச்சத்திற்காய்
வாய்மூடும் வாழ்வை தவிப்பது மேல்
மாயக் கனவை நிறுத்தும் வரைக்கும்
நீளக் கண்மூடி
எம் நிலத்தில் சித்தார்த்தன் வந்தேறுவான்
மாயக்கனவினிக்க கண்ணுறங்கும் காலத்தை
காவலரண் ஒன்றை கருத்தரிக்கச் செலவு செய்
எழுந்து வருகிறது வெள்ளரசு
தமிழ் விழுதுகள் வீழ்த்த .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (16-Apr-13, 3:40 pm)
பார்வை : 161

மேலே