0000000000சுழியெதற்கு?

என்னைக் கொஞ்சம் வாசியென்று
எவரிடமுஞ் சொல்வதில்லை.
சுழி கண்டு இழிப்பாரென்றே
சோருகின்ற சிந்தை கொண்டே!
வாடி நிற்குங் கவிதைகளை
வாரி நானே கொஞ்சுகிறேன்..
பாடி நானே அரவணைத்து
பாசங்கூறித் தேற்றுகிறேன்.
அழகிக்கான போட்டிக்கா
அணிவகுத்தன கவிதைகள்.
சுழியென்ன அடையாளமோ!
இழிந்ததென்றே எண்ணலாமோ!!
சுழி கண்டும் நாணாதோ!
இழிவென்றும் கோணாதோ!
அச்சப்பட்டே படைப்புகளும்
அறைமறைந் தொளியாதோ!!
(க)விதைகளை விதைத்து விட்டு
காத்திருந்தோம் அறுவடைக்கு..
சுழிகளைத்தான் பூத்ததே!
சொக்கனே யென்ன செய்வோம் !
சுழியெதற்கு வேண்டாமே!
வழிவேறு காணுங்களேன்.
விழிபிதுங்கும் சிந்தனையில்
விளைந்ததை மதித்திடுவோம்!.
போட்டியும் வேண்டாமய்யா!
பரிசுகளும் வேண்டாமய்யா!
காட்டினால் போதுமய்யா!.
காலமும் கவிதைசொல்வோம்!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா..