ஒரு சொல் கேள்..
ஒரு சொல் கேள்..
==============================ருத்ரா
அன்பே
நம் காதலுக்கு
கழிநெடிலடியில்
எண்சீர் விருத்தம் கொண்டு
மைல் கணக்கிலா
எழுத வேண்டும்.
ஒரு சொல் போதுமே.
அன்று
திடீரென்று வாய்குவித்து
சிரித்தாயே
அது என்ன?
"நிலாப்பிஞ்சு."
என்னை நோக்கி
கண்களை வீசிவிட்டு
முகத்தை திருப்பிக்கொண்டாயே
"தூண்டில்"
அன்று நான் உன்னை
பார்க்கவில்லை என்று
உன் கண்ணீர்த்துளிகள் எத்தனை
சிதறின.
"வைரங்கள்"
இரவுகள் தோறும்
நம் தலையணைகள் நனைந்தன.
அதுவே நம் காதலுக்கு...
"கும்பாபிஷேகம்"
நடக்கும்போது தான்
பேசுகிறாய்.
வாயே திறக்காமல்.
"கொலுசுகள்"
உன் கையெழுத்தே
நம் அழகிய தலையெழுத்து.
"மெகந்தி"
நம் காதலுக்கு கண்கள் இல்லை.
ஆனால் எண்கள் உண்டு.
"செல்ஃபோன்"
ஆற்றோர நாணலுக்கு
கழுத்து சுளுக்கிக்கொண்டது.
உன்னைப்பார்த்து "காப்பி"அடித்ததில்
"நாணம்"
மூன்றாம்பிறைகளை
வெட்டியெறிந்து நகங்களில் எல்லாம்
நிலவைப்பூசிக்கொண்டாய்.
"நெயில்பாலிஷ்."
உன் நீள ஜடையில்
எகிப்தும் சுருண்டு கிடக்கிறது.
ஏனெனில் அது..
"நைல்"
====================================