மீண்டும் வந்திடுமோ ?

கண்கள் திறந்தும் ஒன்றும் தெரியா
மழலைப் பருவமும் வந்திடுமோ !

பாலும் சோறும் உண்டு திரிந்த
பால்ய வயதும் வந்திடுமோ !

பள்ளி கல்லூரி கல்வி பயின்று
துள்ளிய காலம் வந்திடுமோ !

இளமைக் காலத்து இனிமைகள்
இனியும் மீண்டும் வந்திடுமோ !

வாகனம் குறைந்த சாலைகள்
மீண்டும் இங்கு வந்திடுமோ !

நெரிசலே இல்லாத பேருந்துகள்
நாமும் பயணிக்க வந்திடுமோ !

மின்வெட்டே இல்லாத தமிழகம்
மீண்டும்தான் இனி வந்திடுமோ !

வரிசையே இல்லாத ரேஷன்கடை
நம்காலத்தில் இனி வந்திடுமோ !

சாதிகளே இல்லாத சமுதாயம்
உருவாகும் காலம் வந்திடுமோ !

கட்சிகளே மறைந்து மறந்தும்
நாட்டில் இனி வந்திடுமோ !

ஊழலும் பட்டினியும் அறவே
இல்லாத காலம் வந்திடுமோ !

வறட்சியே இல்லாத வளமான
புரட்சி பாரதம் வந்திடுமோ !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Apr-13, 3:23 pm)
பார்வை : 74

மேலே