காதோரம் பாடும் கடல் வாழ் பயணங்கள்.

எங்கேயோ பிறந்து எங்கேயோ வாழ்ந்து வருகிறோம்
எங்குதான் பயணிக்கிறோம் என்றே தெரியவில்லை
எதிர்காலம் விரிந்து பரந்து இருளாக இருக்கிறது.
ஆளும் குலம் இடம் பெயர்ந்தால் விளிக்கப்படுவது அதிதி என்று
அநாதியான எங்கள் குலம் இடம் பெயர்ந்தால் விளிக்கப்படுவது அகதி என்று

விடியல் இல்லாத இந்த வானத்தில் நாங்கள்
கிழக்கு நோக்கித்தான் தவம் இருந்தோம்

சூரியன் உதிக்கவே இல்லாத காலையில்
பிறருக்கு கிடைத்த வெளிச்சம் கூட
மேற்கில் சூரியன் உதித்த போது

எங்களுக்கோ சூரியனே உதிக்காத கிழக்காகவே உள்ளது

எங்களுக்கு மட்டும் ஏன் இயற்கை இந்த வஞ்சம் இழைக்கிறது
எங்களுக்கு மட்டும் இந்த பூமி தாயாக மறுப்பது ஏன்?

ஏன் விடிய மறுக்கிறது எங்கள் வானம் மட்டும்?
என்று விடியும் எங்கள் இருள் நிறைந்த இந்த இரவுகள்?

விடியலை தேடி நெடிய பயணம் தொடங்கி தொடர்ந்து விட்டோம்.
முடிவில்லா இந்த பயணத்தில் இரவுகளே கூட பழகிவிட்டதால்
இனி விடியல்களை அறிமுகம் செய்தாலும்
எங்களுக்கு புரியாமலே போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

சுற்றும் உறவுகள் சூழ வாழத்தானே ஆசித்தோம்.
எங்களை சுற்றிலும் ஏன் சுற்றம் கூட மறுக்கப்பட்டது.

சுட்டும் விரல்கள்கூட இங்கே ஒடிக்கப்படுகின்றன
எங்களை சுட்டும் இந்த நெருப்புக்கு தாகம் தீரவில்லை

கடலில் தத்தளித்து கரையே இன்றி வாழப் பழகி விடுவோம்.
கரையை கண்டாலும் அங்கே
கொலைவெறியை எதிர்நோக்கும் பீதியே கொள்வோம்.
ஏன் இந்த பிறப்பு என ஏங்கி ஏங்கி அதுவும் சலித்து விட்டது.
நொந்து கொள்ளும் துயர எல்லையும் பின்னால் தங்கி விட்டது
எங்களின் திசையில்லா பயணம் மட்டும் இன்னும் முடிவுக்கே வர மறுக்கிறது

எழுதியவர் : தளம்கருத்து (22-Apr-13, 3:56 pm)
சேர்த்தது : THALAMKARUTHTHU
பார்வை : 126

மேலே