புத்தக நாள் உறுதிமொழி !

கொத்துக் கொத்தாய்
விரிந்து கிடக்கின்றன‌
வாழ்வின் அனுபவ‌ங்கள்
வார்த்தைகளாய்
வசனங்களாய்
புத்தக வடிவில்

மணம் வீசும் மலர்கள்
போலப் புத்தகங்கள் உணடு !
விஷம் முறிக்கும்
மூலிகைகள் போல
புத்தகங்கள் உண்டு !
வாழ்வில் எழ வைக்கும்
புத்தகங்கள் உண்டு !
இற்று விழ வைக்கும்
புத்தகங்களும் உண்டு !
விரிந்து கிடக்கின்றன
அனுபவங்கள்
வித விதமான
புத்தக வடிவங்களில் !
எதை எடுப்பது
எதைப் படிப்பது
என்பது உன் விருப்பம் !

உனது வாசிப்பும்
எனது வாசிப்பும்
ஒரே நேர்கோட்டில் என‌
அறியும்போது
முகிழ்க்கும் நட்பும்
உதவ நீளும் கரங்களும்
புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல !
மானுடத்தின் வெற்றியாய் !

உன்னை நான்
அறியவும்
என்னை நீ
அறியவும்
வார்த்தைகளை விட‌
வலிமையாய்
வாசிக்கும் புத்தகங்களும்
எழுதும் எழுத்துக்களும் !
இணைக்கும் பாலமாய் !

ஆயிரமாயிரம் கவிதைகள்
வரும்வேளை நானும்
எழுதவா ? என நினைத்த வேளை
கவிஞர் பாலாவின் கருத்தொன்று
கண்ணில் பட்டது !

உனது அனுபவத்தை
உன்னால் மட்டுமே
எழுத்தாய் இலக்கியமாய்
பதிய இயலும் !
ஏழு கோடி தமிழர்களும்
கூடக் கவிதை எழுதட்டுமே !
என்ன கெட்டது !
அவரவர் அனுபவம்
அவரவர் எழுத்துக்களில் !
நிற்பது எது ?
கால வெள்ளத்தில் கரைவது எது ?
என்பதனை காலம் தீர்மானிக்கும் !
எழுத மறுக்காதே !
எழுத மறக்காதே !
என்றார் ஒரு புத்தகத்தில் !

உறங்குவதற்கும்
உண்பதற்கும் நேரம்
ஒதுக்குதல் போலவே
வாழ்வில் தினமும்
எழுதுவதற்கும் நேரம்
ஒதுக்கி
எழுதுவோம் தினந்தோறும் !

எழுதியவர் : வா. நேரு (23-Apr-13, 11:04 am)
பார்வை : 68

மேலே