தமிழ்த் தாய் வாழ்த்து

மதுரை நகர் மல்லிகையும் மரிக்கொழுந்து வாசனையும்
தேன் கலந்த தினைமாவும் தித்திக்கும் பலாச்சுளையும்
மான்வந்து விளையாடும் மலர்ச்சோலை போன்றதுவே!
மலைமுகடு புகழுயர்ந்த மணித் தமிழின் திருவடியே!

பொதிகைமலை இளம் காற்றோ ! பூவானிப் புதுப்புனலோ !
சேற்றுவயல் நாற்றுநடும் சேயிழையின் பாட்டிசையோ !
ஆடியிலே மழைபொழியத் தேடிவிதை கொண்டோடும்
ஏருழவன் முகம்போலே எழில் விளங்கும் தமிழணங்கே !

களையெடுக்கும் உழத்திமகள் கயல்விழியோ வயல் மீன்கள் !
வயல்மீன்கள் வரும்வரையில் தவமிருக்கும் கொக்கினங்கள் !
மத்தளமோ தவிலிசையோ மருதநிலத் தவளையொலி !
இத்தளத்தில் பெருமையுடன் இயக்கி மகிழ் தமிழணங்கே !

வயல் வரப்பில் மேய்ந்துவரும் மடிகனத்த தாய்ப்பசுக்கள்
தத்திவரும் தவளைகளும் தாவிமடி முட்டிவிட
கன்றெனவே மெய்மறந்து கசியவிடும் மடிப்பாலை!
பால்கலந்த வயல்நீரைப் பார்த்துவக்கும் தமிழணங்கே !

வாசமுடன் சுண்ணாம்பை வாடாத வெற்றிலையில்
பாசமுடன் பாக்கும் வைத்து பசிதீர்ந்த உழவனுக்கு
ஆசையுடன் அவள்கொடுக்க அவன்வாங்கும் காட்சியினை
நேசமுடன் பார்த்துவக்கும் நிலையுயர்ந்த தமிழணங்கே !

(மலைமுகடு -- மலையுச்சி ; பூவானி--பவானி)

எழுதியவர் : நா.வேலுசாமி .ஈரோடு (23-Apr-13, 9:14 pm)
பார்வை : 154

மேலே