முடிந்த வரை நனைந்திடுங்கள் ........

எனக்குத் தெரிந்து
எந்த உபகரணம் கொண்டும்
தடுக்கவில்லை யாரும்
பெய்யும் மழைக்கும், காய்ந்த தலைகளுக்கும் ,
இடையே உள்ள இடைவெளியை !
பரவி விழுந்திடும் துளிகளில்
பதறி ஓடவில்லை யாரும் -மாறாக
புரவி போல் ஓடி கதறி எல்லோரையும் அழைத்து
சிதறிச் சிதறி நனைகிறார்கள் மழையில்!
ஆடுகிறார்கள்
சிறுவர் பெரியோர் பாகுபாடின்றி
மழையைக் கொண்டாட
அவரவற்கு தெரிந்த அசைவுகளில் !
இன்றைய அதிசயம் டைனோசரைப் போல்
மாறக் கூடும் நாளை
மழையும் !
முடிந்தவரை மூழ்கி
நனைந்திடுங்கள் மழையில்!
யார் கண்டது !
உங்களையும் இப்புவியையும்
நனைவிக்கும் இறுதித் துளிகளாய்க்
கூட இருக்கலாம்
இப்போது
நீங்கள் நனைந்து கொண்டிருக்கும் மழை!