தமிழகமே! நாளைய நூற்றாண்டில் நானில்லையா!!!
தமிழகமே!
நாளைய நூற்றாண்டில் நானில்லையா!!!
அம்மா, அப்பாவென்ற கனிந்த சொல்
ஆங்கில ரசாயணத்தில் அழிந்து போக
சீனனும், கொரியனும், சிங்களனும் எழுதும்
சிந்தும் மொழி ஆங்கிலமல்ல புதுதமிழா!!!
புல்,பூண்டு, செடி,கொடி வளரா
புனல்பாயா பாலை நிலந் தன்னில்
பிறந்த அரேபிய மொழியும் தன்
சிறகு விரித்து கணினியில் பறக்கிறதே!!!
வாழ்கிறான் நின்னில் வசதியாக அவன்
வளர்கிறான் மாமலையின் உயரமாக - நீ
பள்ளி தாழ்ப்பாழ் போட்டு என்னை வெளிதள்ளி
சாதித்த சாதனை ஊமை கண்ட கனாவோ!!!
அரும்பு விட்ட நேற்றையமொழி கூட
கரும்பாய் மருந்து, பொறியியல் வளர்க்க
ஆங்கில சாக்கடை வாச வசந்தன்னில்
நீ என் சங்கறுத்து நிற்கிறாயே!
கள்ள தோழி கை பிடித்து
வயிறு வளர்க்கும் புதுதமிழா- நீ
என் குரல் வளை நெரித்து
குரலொலி அழித்து கொல்வது யாருக்காக?
கன்று பிரிந்த ”ஆ”வாய் துடிக்கிறேன்
மகனை யிழந்த தாயாய் தவிக்கிறேன்
நீயுன் மழலையை என்னிடத்தில் அனுப்பு
கரும்பாய் வளர்த்து கடவுளாய் மாற்றுவேன்!
உன் வயது நானறிவேன் - புதுதமிழா
என் வயதை யெவரறிவர் இங்கே? - நான்
கண்மூடி நடந்த காலமே ஈராயிரம்
நின் கண் திற! என் கண் பிடுங்காதே!!!
நின்தாய் நினக்கு வூட்டிய அமுது
நின் மகற்கு வேண்டாவா! தமிழ்பெண்ணே! தாயே!
பணம், செல்வாக்கு, பகட்டுவாழ்வுக்கு அழிக்கநினைப்பது
பல்லாயிரமாண்டு காலமாய் வாழும் என்னையா!!!
நேற்றைய தமிழன் வாய் தொட்டு
இன்றைய தலைமுறை வுடல் புகுந்து
நாளைய தலைமுறை போடும் சட்டம்
தமிழ் நாட்டில் தடா! தமிழ் பேசுவோருக்கு!!!!
திசை மறக்க; ஒன்று, இரண்டு
எண் மறக்க; போ, வா சொல் மறக்க;
வீதி, சாலை பெயர் மறக்க; ஆங்கில
விலாசம் தந்து யென்னாவி பறித்தாயே!!!
பள்ளி மழலையின் வாய்க்கு யென்பூட்டு
ஆங்கில கழிவுக்கோ வாய் பாட்டு
வரும் மழலையை வரவேற்கும் அன்னை
வாய் மலர்கிறாள் ஆங்கில தாலாட்டுயிட்டு!!!
மூ வேந்தன் மகுடம் சூட்டி
முழு நிலவாய் வாழ்ந்த காலந்தன்னை
முழுதும் இழந்து நிர்மலமாய் நிற்க - புதுதமிழா
ஆங்கில வேலெடுத்து விலாயெலும்பில் இறக்குகிறாயே!!
தமிழ் மகளே! தாய் குலமே! தமிழச்சியே!
நினது,நின் மழலை நாவினுள் யாதோ
அஃதுவே நாளையிந்த மண்ணின் மடியில்
நாளைய நூற்றாண்டில் தமிழகத்தில் நானில்லையாஆஆஆஆஆஆஆஆஆ………
நன்றி
வாழ்க தமிழ் வளமுடன்