முதல் இரவும் முடிந்துபோன வாழ்க்கையும்....

அன்று ஞாயிற்றுக்கிழமை... அலுவலக விடுமுறை நாள் என்பதால், வழமையாக 6 மணிக்கு நித்திரைவிட்டெழும் செந்தூரன், 8 மணி கடந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சித்திரை வெயில் சூட்டைக் கக்கிக்கொண்டிருப்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை விளங்கவில்லை. பின்னர் ஒருவாறு கண்களைக் கசக்கியபடியே 9.30 மணியளவில் கட்டிலிலிருந்து எழுகின்றான்....

எழுந்தகையோடு நேரத்தைப்பார்த்த மறுகணமே அவனின் விழிகள் நாட்காட்டிப் பக்கம் திரும்புகின்றன. நித்திரைக் கலக்கத்தில் இருந்த செந்தூரன், நாட்காட்டியில் அன்றைய திகதியைப் பார்த்ததும் திடீரெனத் திகைத்து எழுந்தான். கண்கள் சிவப்பு நிறமாக மாறுகின்றன ;உடலெங்கும் வியர்வை ஊற்றெடுக்க ஆரம்பிக்கின்றது... பதற்றம் கலந்த சோகத்துடன் காணப்பட்ட செந்தூரன், தலையில் கைகளை வைத்தபடி அருகிலிருந்த கதிரையில் அமர்கின்றான்.

குழம்பிப்போயிருக்கும் மனதைச் சமாளிப்பதற்குத் தனக்குத்தானே அவன் ஆறுதல் சொல்லிக்கொண்டாலும், எதை மறக்க நினைக்கின்றானோ அந்தச் சம்பவம்தான் மீண்டும் மீண்டும் அவன்முன் அலையாய் வந்துசெல்கின்றது. இதனால் நொந்துபோன செந்தூரன், கண்களை மூடியவாறு மேல்நோக்கிப் பார்க்கின்றான்... விழிகளை மூடி அணைக்கட்டு போட்டாலும் மனதுக்குள்ளிருக்கும் சோகம் கண்ணீர் வெள்ளமாய் உடைப்பெடுக்கின்றது...

அப்படி செந்தூரனின் வாழ்வில் என்னதான் நடந்தது? அவனது வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற அந்தச் சம்பவம் மட்டும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பது ஏன்?

எழில்கொஞ்சும் மலைநாட்டில் பிறந்த செந்தூரன் வறுமையின் கோரப்பிடியால் ஆரம்பத்திலிருந்தே கடும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே வளர்ந்தான். ஏழைக் குடும்பமாக இருந்தாலும் அவனது குடும்பத்தில் பாசத்துக்குப் பஞ்சமிருக்கவில்லை. சொத்துப்பத்து இல்லாவிட்டாலும் அன்பு என்பது அவனது குடும்பத்தில் நிலையான சொத்தாக விளங்கியது.

பெற்றேhர் தொழில் செய்தாலும், வீட்டுக்கூலி உள்ளிட்ட செலவுகளால் அவர்கள் பெறும் நாட்கூலி வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்கே போதுமானதாக இருக்கவில்லை. இதனால் கடன்பட்டே பிள்ளைகளைப் படிக்க வைத்தனர். ஆனால், அது நீடிக்கவில்லை. கல்வியில் செந்தூரன் அதிக ஆர்வம் காட்டியதால் அவனது இரண்டு சகோதரிகளும் அவர்களின் கல்வியைக் கைவிட்டுவிட்டு - தியாகம்செய்துவிட்டு, வீட்டுவேலைக்குச்சென்று உழைத்து தம்பியைப் படிக்கவைத்தனர்.

இதனால், சகோதரிகளின் திருமணமும்கூட தாமதப்பட்டது. இவ்வாறு பல கவலைகளுக்கு மத்தியில் கல்வியைத் தொடர்ந்த செந்தூரனுக்குப் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இது அவனது வாழ்க்கையில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதற்கிடையில் அவனது சகோதரிகளின் திருமணமும் ஏழைவீட்டுத் திருமணமாக நடந்தேறியது.

உயர்தரம் முடித்தகையோடு தொழில் துறைக்குநுழையும் செந்தூரன், பலத்த சவால்களுக்கு மத்தியில் தனது கடின உழைப்பால் இரண்டு வருடங்களுக்குள் ஒரு சாதாரண நிலைக்கு வந்துவிடுகிறான்... அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி நடுத்தர வர்க்கத்துக்குள் நுழைந்துவிடுகிறான்.

காலம் காற்றாய் பறந்துகொண்டிருக்கையில், செந்தூரனுக்கும் 28 வயது ஆகிவிட்டது. பின்னர் என்ன... வீட்டில் திருமணப்பேச்சு அடிபடுகின்றது... கல்யாணத் தரகர்களும் அவனது வீட்டுக்கு அழகிய பெண்களின் படங்களுடன் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.... நீண்டநாட்களுக்குப்பிறகு பெற்றேhரின் விருப்பத்துக்கிணங்க திவ்யா என்ற பெண்ணை மணம் முடிப்பதற்கு அவன் சம்மதித்தான்.

கல்யாண மோகம் சூழ்ந்துகொள்ள கனவுலகில் மிதப்பதற்கு ஆரம்பித்துவிட்டான் செந்தூரன்.... தினமும் அவளுடன் ( திவ்யா) கதைப்பது, எதிர்கால வாழ்க்கை குறித்துத் திட்டமிடுவது என அந்தக் காலப்பகுதி சுவாரஷ்யமிக்கதாக சென்றுகொண்டிருந்தது.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி திருமணம் நடைபெறுகின்றது.

திருமணம் முடிவடைந்த பின்னர் கண்டியிலிருந்து அன்றிரவே இருவரும் தேனிலவுக்காக நுவரெலியாவுக்குப் புறப்பட்டுக்கொண்ருந்தனர். சாந்தி முகூர்த்தத்துக்கு அன்றையநாள்தான் நல்லநாள் என சோதிடர்கள் கூறியதால், அவர்களால் பயணத்தைப் பிற்போடமுடியவில்லை.

கார் இறம்பொடை காட்டுப் பகுதியை அண்மித்துக்கொண்டிருக்கையில்,போதைவெறியிலிருந்த கும்பலொன்று, காரை இடைமறித்து அடாவடியில் ஈடுபடுகின்றது....( இருவரும் செய்வதறியாது காட்டுப்பகுதியில் தவிக்கின்றனர்) இவ்வேளையில், செந்தூரன் தமிழன் என்பதை அறிந்துகொண்ட அந்தக் கும்பலுக்குத் தானாகவே தைரியம் வருகின்றது.

அடித்துப்போட்டதாலும், (மனைவி கதறி அழுகிறார். வெறியர் கும்பலிடமிருந்து தப்பிப்பதற்கு செந்தூரன் எவ்வளவு முயற்சித்தாலும் அது முடியாமல்போனது) கடுமையாகத் தாக்கப்பட்டதாலும் மயங்கிவிழுகின்றார் செந்தூரன்.... பின்னர் திவ்யாவைக் கொடுமைப்படுத்திய வெறியர் கும்பல், தனது காமப்பசியையும் தீர்த்துக்கொண்டது. மானை புலி கடித்துக் குதறுவதுபோல் அந்த வெறியர்குழு காமயுத்தத்தை முன்னெடுத்தது. இதனால் திவ்யாவும் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தாள்...

வெறியைத் தீர்த்துக்கொண்டு அந்தக் கும்பல் காட்டுவழியாகத் தப்பிச்செல்கின்றது. சில நிமிடங்கள் கழித்து அவ்வீதியினூடாக வாகனமொன்று வருகின்றது... வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட புதுமண ஜோடியை வாகனத்திலிருந்தவர்கள் அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்கின்றனர். இருவரும் உடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

மகனுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் செந்தூரனின் பெற்றேhர் அன்றிரவு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.
நேரம் 11 மணியிருக்கும் அப்போது தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது... மகன்தான் எடுக்கிறார் என நினைத்து சொல்லுங்க .. கண்ணா என அம்மா கூறுகிறார்.. மறுபக்கத்திலிருந்து சிங்கள மொழியில் குரல்கேட்டது. இதனால் பதற்றமடைந்த செந்தூரனின் தாய் தொலைபேசியைக் கணவனிடம் கொடுத்தார். மகனுக்கும் மருமகளுக்கும் நேர்ந்த கதியை தொலைபேசியினூடாக அறிந்துகொண்டனர் பெற்றேhர். பின்னர் மருமகள் வீட்டினருக்கும் சோகத் தகவலை அறியக் கொடுத்தனர். இரவோடிரவாகப் பதறி அடித்துக்கொண்டு இறம்பொடை வைத்தியசாலைக்குச் சென்றனர்.

அங்கு சென்றதும், அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணக்கோலத்துடன் சென்ற மருமகளை இரத்தவெள்ளத்தில்கண்ட செந்தூரனின்தாய் இவ்விடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். அன்று இரவு முழுவதும் செந்தூரனின் பெற்றேhர் வைத்தியசாலைக்கு வெளியிலேயே காத்திருந்தனர். மறுநாள் காலை அவர்களுக்கு மருமகள் மரணித்துவிட்டாள் என்ற செய்தியே கிடைத்தது. இதனால் இரு வீட்டாரும் சோகக்கடலில் மூழ்கினர். செந்தூரனுக்கு இரண்டு நாட்களாக சுயநினைவு வரவில்லை. இதற்கிடையில் திவ்யாவின் இறுதிக்கிரியைகள்கூட முடிவடைந்துவிட்டன.

மூன்றாவதுநாள் செந்தூரனின் உடல்நிலையில் சற்றுமுன்னேற்றம் ஏற்பட்டது. திவ்யாவுக்கு நேர்ந்த கதியை எவரும் செந்தூரனிடம் சொல்லவில்லை. அவள் வீட்டில் இருக்கிறார் என்றே கூறிவந்தனர். ஒரு வாரத்தின் பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றதும் திவ்யாவைத் தேடுகின்றார் செந்தூரன்..அப்போது பெற்றேhர் நடந்தவற்றைச் சொல்கின்றனர். அந்தச் சம்பவம் - அந்தக் கொடூரச் சம்பவம் செந்தூரனுக்கு நினைவுக்கு வருகின்றது....

இதனால் கதறி அழுத அவன் .. ஐயோ... என் தங்கம் எங்கே என்ல்லாம் புலம்புகின்றார்... மறுபுறத்தில் பெற்றேhரும் ஒப்பாரி வைக்கின்றனர். அன்றிலிருந்து வீட்டில் சிரிப்போ அல்லது இன்பமோ - சந்தோஷமோ பொங்கவில்லை. சோகமே செந்தூரனின் நிரந்தர முகவரியாகிவிட்டது.
அன்றிலிருந்து அந்தச் சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் திகதி வரும்போது ஒவ்வொரு தடவையும் செத்துச்செத்துப் பிழைப்பதுபோல் ஒரு கொடூர சோகத்தை செந்தூரன் உணர்வான். அன்றையநாள் நாள் முழுவதும் அவனை சோக மேகங்கள் சூழ்ந்துகொள்ளும். ஆறுதல்சொல்வதற்குப் பெற்றேர் கூட இல்லை.
கதிரையில் இருந்து எழுந்த செந்தூரன் மீண்டும் கட்டிலில் அமர்கின்றான்...

இரா. சனத்
கம்பளை

எழுதியவர் : இரா. சனத் கம்பளை (1-May-13, 12:12 pm)
பார்வை : 470

மேலே