விழித்தவன் கூற்று.

"பூத்"எனும் வடமொழி
வேர்ச்சொல் அதற்கு
விழிப்பு என்பதே
பொருளெனச் சொல்வர்
புத்தன் என்றால்
விழித்து நிற்பவனென
சத்தம் போட்டுச்
சொன்னால் சரியே.

சரியான நேரத்தில்
துறவது பூண்டு
விழித்துக் கொண்ட
விந்தை மனிதன்
அறவழி வாழ்ந்து
ஆசை அறுகென
திறம்படச் சொன்னான்
திரிபீடக மன்னன்.

லும்பினி வாழும்
பார்ப்பனன் ஒருவன்
கும்பிட்டுக் கேட்டான்
பிறவிப் பிணியை
போக்கிடும் வழியை
செய்திடும் பாவம்
நீக்கிடும் செயலை
செப்பிடக் கேட்டான்.

“என்னிடம் உள்ளதில்
இரண்டு காணியை
உம்மிடம் தருவேன்
பிரண்டை வாழ்விதில்
புண்ணியம் இல்லை
என்னையும் உம்முடன்
சேர்த்துக் கொண்டு
அமைதியை அருள்வீர்”

அத்தனை சொத்துடன்
மெத்தென வாழ்ந்தவன்
உத்தமன் போலே
உவந்து நடிப்பதை
முத்திரை மாறாத
தோற்றத்தில் கண்டு
சுத்த பாலியில்
சுவைபடச் சொன்னார்,

“உள்ளத்து உயர்வே
உன்னத வழியாம்
உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் வேறொன்றும்
பேசிடும் போக்கினை
கபடம் நீக்குவாய்
அளவுக்கு மிஞ்சிடும்
அத்தனையும் நஞ்சாகும்”

தேனும் பாலும்
தெவிட்டா கலவியும்
அளவுக்கு மிஞ்சினால்
ஆகிடும் நஞ்சென
விழித்திட்ட புதுமையில்
மருத்துவம் கூறிடும்
கருத்தினை அன்றே
கவுதமன் கூறினார்..

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (3-May-13, 2:26 pm)
பார்வை : 108

மேலே