விட்டு வந்த வீட்டு வாசல்
பல் விளக்கும் பட்டை வேப்பங்குச்சி
பிடிக்க போகும் பட்டாம்பூச்சி
நீச்சலடிக்கும் ஏரி குட்டை
நித்தமும் ஏறிடும் மாட்டு வண்டி
கண்ணடித்த பக்கத்து வீடு
காணமல் போன கறவை மாடு
பார்க்க துடிக்கும் பம்பர விளையாட்டு
காண துடிக்கும் கபடி விளையாட்டு
விரட்டி பிடித்த கோழி மாடு
விழுந்து எழுந்த தொழி வயல்
பயந்து கும்பிட்ட பண்ணாரி அம்மன்
கண்கள் குளிர்ந்த இரவு கரகாட்டம்
நினைவில் நிற்கும் நிலா சோறு
நினைவிழந்த பல்லாங்குழி
அடித்து விட்ட அண்ணன் பயன்
அடி வாங்கின தம்பி மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட பள்ளி புத்தகம்
பாழாய் போன தண்ணீர் குழாய்
சண்டை போட்ட சித்தப்பா வீடு
உதவி செய்த நண்பன் வீடு
உண்ணாமல் இருந்த அக்கா மகள்
உயிராய் காதலித்த மாமன் மகன்
கைகாட்டி காரில் போன மாடி வீட்டு காரன்
மனதை உலுக்கிய குடு குடுப்பை காரன்
நித்தமும் சப்தமிடும் ஒரேயொரு அரசு பேருந்து
நிசப்தமாய் வந்து போகும் மழைத்தூறல்
ஏரியில் இறந்து போன எதிர் வீட்டு பையன்
ஏங்கி தவித்த வயது முதிர்ந்த அக்கா
களை எடுக்கிறப்ப கதை சொல்லி
களைப்பு போக்கும் களவாணி பாட்டி
திருந்தி வாழும் முரட்டு பயலுங்க
பட்டணம் செல்லும் படித்த பயலுங்க
கலர் கலராய் தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும் கொட்டகை தாத்தாங்க
காளை மாடுகளோடு அய்யா மாறுங்க
வெயிலில் வேலை செய்யும் அம்மா மாருங்க
பீடி சுற்றும் பச்சிளம் பொண்ணுங்க
பீடி குடிக்கும் பிஞ்சி பயலுங்க
ரெட்டை சடை போட்ட படிக்கிற பொண்ணுங்க
தத்துவம் அதிகம் பேசும் காதல் கிருக்கங்க
மருத்துவம் கொடுக்ற மங்கத்தா பாட்டி
குறி சொல்கிற மாரியம்மா பாட்டி
முழம் போடும் மல்லிகை பூக்கள்
தாளம் போடும் பள்ளி தட்டுக்கள்
விட்டு வந்த வீட்டு வாசல் முற்றம்
வீதி எல்லாம் இன்னும் ஞாபகமாய் ..
எத்தனை சொல்லி எத்தனை விட முடியும்
இந்த மறக்க முடியா மாணிக்க நினைவுகளை