பிரியாதே என்னுயிரே

நெஞ்சம் உடைத்தானடி தோழி
நேற்றுபோல் இன்று இல்லை
உள்ளங்கைப் பூவாய் ஏந்தியவன்
உதறிச் செல்ல சருகானேன்

முழுதாய்ப் புரிந்தவன்
என்னுள் தொலைய மறுத்து
காதல்பிழையாய் மாற்றிட
பைத்தியமாய் பிதற்றினேன்
சொல்லடி தோழி
என் வேதனை அறிவானோ

மழலைகளாய் அரவணைக்கும்
எனக்குள் கருவான
செல்லவார்த்தைகள் யாவும்
கரைவேன் உனையன்றி
காத்திருக்கும் பொழுதினில்
போகாதே என்னுயிரே

கண்ணீரில் உதிர்வதெல்லாம்
உள்ளக் காயத்தின் வலிகள்
வீங்கிய துக்கம் தூங்கவில்லை
முற்றிலும் ஆட்கொண்டாயே
விலகிச் சென்ற நூதனம் ஏனோ

நேரங்கள் பொறுக்கவில்லை
குமுறிடும் உணர்வுகளை
மறைக்க மறுக்கத் தெரியவில்லை
யாவுமாகி நின்று வென்றவனே
விளங்கவில்லை விளக்கமில்லை
இதயமின்றித் துடிக்கிறேன்

கொன்றுவிட்டுப் போ
என்னை – என் காதல் கொல்லாதே
எஞ்சிய நாட்கள் பிச்சை இட
மனம் நொந்து வாழாது
உன்திசை இருந்து உயிர்துறப்பேன்

இறுதிவரை நீயெனக்கு
உள்ளங்கவர் கள்வனே
எனக்கே உன்னைத் தந்துவிடு !

எழுதியவர் : Harshavardini (6-May-13, 1:10 am)
பார்வை : 207

மேலே