...கொழுக்கட்டை ....

அழகு சுந்தரம், அபிராமி என்று புதிதாக திருமணம் செய்த ஜோடி ஒன்று அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் வேலை விஷயமாக அழகு சுந்தரம் பக்கத்து கிராமத்துக்கு சென்றான். அது அவன் மனைவி ஊர்தான். வேலை முடிந்து மாமனார் வீட்டுக்கு சென்றான். வராத மாப்பிள்ளை வந்திருக்கின்றாரே என்று அவன் மாமியார் விழுந்து, விழுந்து உபசரித்தார். விருந்து முடிந்தது பலகாரம் சாப்பிடக் கொடுத்தார். இதற்கு முன் அப்படிப்பட்ட பலகாரம் அவன் சாப்பிட்டதில்லை. அவ்வளவு ருசி அவன் நாவுக்கு அந்த பலகாரம். 'எப்படி செய்வது' என்று மாமியாரைக் கேட்டான். அவரும் "போய் உன் மனைவியிடம் கொழுக்கட்டை செய்து கொடு" என்று கேள். அவள் செய்து கொடுப்பாள் என்றார். அவனும் சரி என்று சொல்லி ஊருக்குக் கிளம்பினான். பெயர் மறந்து விடாமல் இருக்க "கொழுக்கட்டை" "கொழுக்கட்டை" என்று சொல்லிக் கொண்டே போனான். போகிற வழியில் ஓர் ஓடை குறுக்கிட்டது. வேகமாகத் தாண்டினான். தாண்டும்போது "அச்சிரபாட்சா" என்று சொல்லியபடியே தண்டினான். பிறகு மீத தூரத்தை "அச்சிரபாட்சா" என்று சொல்லிக்கொண்டே நடந்தான்.

வீட்டிற்கு வந்தவுடன், மனைவியிடம் மாமியார் செய்த ருசியான பலகாரம் பற்றி சொன்னான். செய்து தரும்படி கேட்டான்.' என்ன பலகாரம்' என்று மனைவி கேட்டாள். 'அச்சிரபாட்சா' என்று சொன்னான். அப்படியொரு பலகாரம் தனக்கு செய்யத் தெரியாது என்றாள் அபிராமி. அவனுக்கு ஆத்திரம் வந்தது. 'உனக்கு தெரியும்' என்று உன் அம்மா சொன்னார்களே? ' ஐயோ, எனக்குத் தெரியாது' அபிராமி பதிலளித்தாள். அவனுக்கு மண்டையில் மணியடித்தது போலிருந்தது' ஆத்திரம் தாங்காமல் அபிராமியைக் கண் மண் தெரியாமல் போட்டு அடித்து துவைத்து விட்டான். களைப்படைந்து வெளியில் போய் உட்கார்ந்திருந்தான். அபிராமி அழுதபடி வீட்டினில் உட்கார்ந்திருந்தாள்.

அச்சமயம் பக்கத்து வீட்டு பாட்டி, அவர்கள் வீட்டிற்கு வந்தார். அழுதுக் கொண்டிருந்த அபிராமியைப் பார்த்த பாட்டி, "என்னம்மா, என்னாச்சு? ஏன் இப்படி உடம்பெல்லாம் கொழுக்கட்டை போல் வீங்கியிருக்கு" என்றார்கள். வெளியே உட்கார்ந்திருந்த அழகு சுந்தரத்திற்கு தூக்கிவாரிப் போட்டது.' ஐயோடா! அந்த பலகாரம் பெயர் கொழுக்கட்டையாச்சே, அதை மறந்து வேறு பெயர் சொல்லி அவளை அடித்து விட்டோமே' என்று பதறிப் போய், அவளை சமாதானம் பண்ண வீட்டின் உள்ளே ஓடினான்.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (8-May-13, 12:17 am)
பார்வை : 247

சிறந்த நகைச்சுவைகள்

மேலே