கவிதை எழுதத் தெரியாமல்....!!!(அஹமது அலி)

காகிதமெடுத்தேன்
கரிய மை முனைத் தூவியும்
எடுத்தேன்
கற்பனைக் குதிரை
வாலை முடுக்கியே
வார்த்தைகள் தேடி
அற்புதமாய் பறந்தேன்

விற்பன்னன் போல் நடித்தேன்
சொற்களை மனதுக்குள்
சொல்லிச் சொல்லிப் பிடித்தேன்

வார்த்தைகள் வாகாய் அடுக்கினேன்
வரிகளை செவ்வனே செதுக்கினேன்
கருத்தே இல்லாது போனால்
கருத்து(தூ) வருமோ என நினைத்தேன்

பாடுபொருள் தேடி எடுத்தேன்
பா கைகூடும் வரை மண்டையுடைத்தேன்
எப்படியோ எழுதி முடித்தேன்
எத்தனையோ முறை படித்து ரசித்தேன்

ஆகா..ஓகோ வென
எனக்கு நானே புகழ்ந்தேன்

இத்தனைக்குப் பிறகும்
இதென்ன கவிதையென
என்னுள்ளே எண்ணம் எழ
சட்டெனக் கிழித்தேன்
வேறொரு காகிதம் எடுத்தேன்.!

கவிதை எழுதத் தெரியாமல்...
காகிதம் கிழிக்கிறேன்
கவிதை எழுதிக் கிழிக்காமல்.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (9-May-13, 7:54 am)
பார்வை : 161

மேலே