..............அம்மாவுக்கென.............

நீ சுமந்ததால் நான் சுமையில்லாதவனாய்,
நீ பிறந்ததால் நான் நடமாடும் ஜீவனாய்,
நீ மறுப்பதால் நான் எப்போதும்,
மன்னிக்கப்படுபவனாய் அம்மா !!
.............................................................................
விருட்சம் தளைத்தாலும் வேர்கள் வெளிப்படுவதில்லை,
வெளிச்சம் நிறைந்தாலும் தாய்கள் தலைதூக்குவதில்லை !!
----------------------------------------------------------------------------------------------
எப்போதாவது பூக்கும் குறிஞ்சிமலர் ஆச்சர்யம்தான்,
அதேநேரம் !
எப்போதும் மலர்ந்துகிடக்கும் அன்னை முகம் அதிசயமன்றோ !!
-------------------------------------------------------------------------------------------------------
நிரந்தரம் என்று எதுவும் இல்லை இங்கு நீ தந்த உயிர் உட்பட,
என்றாலும் அதில் நிரம்பிவழியும் பாசம் உன் கரங்கள் எட்டிட !!
---------------------------------------------------------------------------------------------------------
சொல்லமறுத்துவிட்டதால் செல்லரித்துப்போகாது நிஜங்கள்,
அன்னை என்கிற நிஜம் அறியப்படாவிட்டாலும் அழியத்தகாததுபோலே !!
-------------------------------------------------------------------------------------------------------------------
கனவுகளோடும் கவலைகலோடும்,
களைப்பின்றி ஓடுகிறது வாழ்க்கை கடிவாளமில்லாமல்,
கூடவே பாதுகாப்பிற்காய் உன் நினைவுகளோடும் அம்மா !!
-------------------------------------------------------------------------------------------------------------------
தீர்க்கமாய் இருக்கிறார்கள் நமை தூக்கியெறிவதில் சிலர்,
அது தவிர்க்க இயலாதது,
எந்த விசயத்திலும் தவறுமறந்து தாங்கிப்பிடிக்க எவரும்,
அன்னை இல்லையே இங்கு !!
---------------------------------------------------------------------------------------------------------------------
நீரில் கலந்த பாலை தரம்பிரித்து அருந்தும் அன்னப்பறவை,
நினைவில் கலந்த அழுக்கை அகற்றி திருத்தும் அன்னைப்பறவை !!
----------------------------------------------------------------------------------------------------------------------
உயர்ந்தபட்சமாய் உயிரைக்கொடுக்கலாம் நன்றியின் வெளிப்பாடாய்,
அதையே எனக்குக்கொடுத்த உனக்கு என்ன தருவேன் அம்மா?
----------------------------------------------------------------------------------------------------------------------
என்ன வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தருவேன் என்பவன் நான்,
என்னைவேண்டுமானாலும் தருவேன் உன்னை தரமாட்டேன் என்பவள் தாய் !!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-May-13, 12:43 pm)
பார்வை : 78

மேலே