மெல்லத் தமிழ் இனி கொல்லும்-கே.எஸ்.கலை

தமிழுக்கு அமிழ்தென்று பேர் - அந்த
══அமிழ்தத்தை நீ உண்டு வாழ் !
எண்ணற்ற மொழிகண்ட பார் – என்
══தமிழுக்கு அவையெல்லாம் கீழ் !
உயிருக்கும் ஆகாது நேர் - தமிழை
══உணர்வின்றி ஆக்காதே பாழ் !

இயலுக்கு இருக்கின்ற வேகம் – அந்த
══புயலுக்கும் இருக்காது பாரும் !
குயிலுக்கு இருக்கின்ற குரலும் - இன்
══இசைக்கேட்ட உடனங்கு மிரளும்
வெயிலுக்கு இருக்கின்ற சூடும் – வீரத்
══தமிழ்முன்னே மண்டியிட்டு வீழும் !

நறு மணத்தோடு தமிழ்தோட்டப் பூக்கள்
══விலையில்லா தரத்தோடு துளிர்க்கும் !
அழுக்குண்ணும் குணம் கொண்ட ஈக்கள்
══புனிதத் தமிழ்மீது சிலநேரம் மொய்க்கும் !
மொய்த்தாலும் அவை கொல்லும் பாக்கள்
══சளைக்காமல் மீண்டெழுந்து மெய்க்கும் !

உள்ளத்து உணர்வுகள் எழுத்தாகும் - அந்த
══எழுத்துக்கள் இறவாமல் உலகாளும் !
பள்ளத்து எண்ணங்கள் கொண்டோரின்-கடும்
══விடம் போன்ற சூழ்ச்சிகள் எதிராகும்
வெள்ளத்தில் சிக்குண்ட சருகாக - அவை
══விழி முன்னே மடியுமே விரைவாக !

சிலையாக கலையாக இருந்தால்–தமிழ்
══அழகதனை உவமிப்பேன் மங்கையென்று !
காவியமாய் ஓவியமாய் கண்டால்-அந்த
══குளிர்மையினை வர்ணிப்பேன் கங்கையென்று !
தமிழை, அறிவற்று நெறியற்று கொன்றால்-நான்
══அறுத்தெறிவேன் உந்தன் சங்கைஅன்று !

சங்கத் தமிழ் மூன்றும் சொல்லும்
══எங்கள் மொழி அழகென்று எங்கும் !
தங்கத் தமிழ் அழிக்கத் துள்ளும்
══உங்கள் போர் விரைவில் மங்கும் !
மெல்லத் தமிழ் இனி கொல்லும்
══எங்கள் வீரமே எங்கேயும் ஓங்கும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (13-May-13, 8:41 am)
பார்வை : 533

மேலே