புதிய புராணங்கள்-கே.எஸ்.கலை

தோடுடைய செவியனில்
தொடங்கிய “தேவாரம்” – இன்று
நாடுடைய சனியன்களின்
கால்களில் முழங்கிடும்
யாவாரம் ஆகிப்போச்சி !

வீடுடைய மக்கள்,
சதி எழுதிய வாசகத்தால்-
வீடிழந்து,
வீதி வந்து விதியை நொந்து-
யாசகதிற்கு “தெருவாசகம்”
பாடுகின்ற காலமாச்சி !

கறைகண்ட உளம்கொண்ட
விடக் - கைகளில் பல்லாண்டு
சிக்குண்டு சிதறுண்டு
உருளுகின்ற தாய்நாடு -
பல்லாண்டு பல்லாண்டு
பாடுகின்ற – “திருப்பல்லாண்டு”
கேட்காத கதி தானே
சாமிக்கெல்லாம் ஆகிப் போச்சி ?

பதவி வேண்டும்
சொத்து வேண்டும்-அதற்கு
பெரிய பெரிய, நர-முதலைகள்
இருக்கும் இடம் தேடிப் போய்
வஞ்சமின்றி லஞ்சம் ஈந்து
வாழுகின்ற வாழ்கையிலே
பாடுகின்ற பதிகம் பெயர் – நவீன
“பெரியபுராணம்” என்றாச்சி !

விறுவிறுப்பாய் தேர்தல் வரும்
சுறுசுறுப்பாய் மோதல் தரும்...
பழகிவிட்ட மக்கள் கூட்டம்
திருகிவிட்ட பொம்மைகளாய்
கட்சியென்றும் தலைவனென்றும்
கரிசனையில் ஓடி – “தெருப்புகழ்” பாடி
முடிவு வந்து, முக்கால் வருஷம் ஆனவுடன்
மூக்குச் சிந்திப் பாடுகின்ற “திரு வசைப்பா”
செவிகளுக்குப் பழகிப் போச்சி !

சாமியெல்லாம் - கண்டிராத
உண்டிப் பிச்சை வேண்டிக்கொண்டு -
சல்லாபச், சபல, பொல்லாத சூரரோடு
உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட
இல்லாத மக்கள் – தினந்தோறும் இங்கு
ஒரு வேளைக் கஞ்சிக்காய்
வறுமையில் வாடி– பசியோடு பாடுவது
கடவுளுக்கே கேட்காத “பஞ்சப் புராணம்” !

மக்கள் பாடும் “கந்தல் புராணம்”
மகேசன் காதுக்கு கேட்கலியே - இனி
கோயிலுடைக்க வேண்டாம்
சிவபுராணம் பாடி - அந்த
சிவனை அழைக்க வேண்டாம் !
சிவபுராணம் பாடும் நேரம் – சிவனுக்கு
“சவ புராணம்” பாடிடலாம்...
கோபம் வந்து - சாபம்தர சாமி வந்தால்
ஒருமுறை - சாமியை நான் பார்த்திடலாம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (21-May-13, 9:50 am)
பார்வை : 267

மேலே