நடிப்பு ஒன்றே தமிழ்நாட்டை ஆளும் தகுதியா ?

அரிதாரம் பூசும் இவன்
அவதாரப் புருஷன் என்றா ?
ஆளும் அதிகார
ஆசைக் கொள்கின்றான்
அன்னாடக் காட்சிகளாக
அல்லாடும் எம் மக்கள் நிலை
அறியாத பேதை இவனோ
ஆளும் தகுதிக்கு உரியவனோ?

மூன்று படங்கள்
முழுமையாக முடியும் முன்னே
மூன்றிற்கு மேற்ப்பட்ட பட்டங்களிட்டு
முதல்வர் கனவில்
மூழ்கிக் கிடக்கும்
மூடர்கள்- நாடாள
எண்ணுவது சரியோ ?
நாடாண்டால் தமிழர் நிலம்
மிஞ்சுவது நிலையோ?

பணம் சேர
பகட்டு வாழ்க்கைத் தீர
புடை சூழ ரசிகர்கள்
புகழ் பாடல் கேட்டுப்
புளித்துப் போகவே
மக்கள் போற்றும்
மாமனிதர்கள் ஆண்ட
மன்றத்தை ஆள
மதம் பிடித்து திரிவது சரியோ ?

சேர்த்த பணத்தில்
ஏய்த்த பணம் பெருமளவாக
பணம் சேர்க்கும் எண்ணம்
துளியளவும் குறையாது
ஆளும் அரசுக்கு
ஆதரவு தந்து
அடிவருடியாக ....
ஆட்சி மாற
ஆண்டியாகும் சூழல் வர
காட்சியாகும் புதியக் கட்சி
கானலாக்கும் மக்கள் இன்னல்கள் என்றே ........

வாழ்வு தந்த மக்கள்
வாழ்க்கைத் தொலைந்து போக
திரையில் தமிழர் என்று சொல்லி
திரட்ட காசும், கைத்தட்டும்
காவிரி நீருக்கு தமிழர் கையேந்த
காணாமல் ஏன் போனாய் ரஜினியே!
கருநாடகத்தில் உள்ள சொத்து
காணாமல் போய்விடுமென்றோ?
எப்ப எப்படி அரசியலுக்கு வருவேன் என்றே தெரியாத உனக்கு ?
எப்ப எப்படி எமக்காக போராட இயலும் ?

திமுகவும் அதிமுகவும்
தின்று தீர்த்த தமிழகத்தை
தீர்க்கதரிசியாய் காக்கும் சக்தி விஜயகாந்த் என்றாயே ?
தமிழர்களை கொன்று குவிக்க சிங்களம்
தலைவா நீ எங்கு சென்றாய் ?
முப்பகலும் மதுவிலே நிலையறியா நீயோ
முன்னேற்றம் கண்டிட தமிழர் -முயன்றிடுவாயோ ?
காழ்ப்புணர்ச்சியிலோ காலத் தேவையிலோ
கைப்பற்றப் பெற்ற
கல்யாண மண்டபத்திற்காக நீ
கட்சித் தொடங்கி
கண்ட பலன் என்ன தமிழர்?
கறந்த பணம் நிறைய உம்மவர்
ஊழலின் ஊற்றுக்கண் அதிமுக,திமுக என்றாயே
ஊடல் எதுவோ கூட்டணிக்கு உறுதியிட்டது...

திரையில் பேசும்
உரைகள் யாவும்
திரைப்பட இயக்குனரின் -மனத்
திரையில் உதித்த வரிகளென்று
அறியா மக்கள்-இறைவன்
அருளிய மீட்சி என்றா -இல்லை
ஆட்சியில் இருப்பவர் -கெடுதலை
சாட்சியாய் இருப்பவர் என எண்ணியே
மாட்சி வேண்டி
மாயத் தலைவனை
அரியணை ஏற்றும் அவலநிலையிலே?

நடிகர் எவரும்
நாடாளக் கூடாதுன்னு
நாங்க கூறல
ஏழ்மை சூழ்ந்த எம் மக்கள்
ஏற்றம் காண -அவர்கள்
வாழ் வறிந்த ஓர் தலைவன்
வருகைக்காய்
காலம் காலமாய்
காத்து நிற்க்கிறோம்
கதிரவன் ஒளியில்
மலரும் மலர்ப் போல் ...

எழுதியவர் : தமிழ்முகிலன் (23-May-13, 9:28 am)
பார்வை : 291

மேலே