" சிறந்த படைப்புகள்" நாள் - 19/05/2013 ***ஆவாரம் பூ ***

இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்...
19/05/2013 அன்று வெளியான சிறந்த படைப்புகள் நடுவரால் தொகுத்து அளிக்கப்பட்டு உள்ளது..
1)பொறுப்பான காதல் வாழ்க-சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா
2)முள்ளிவாய்க்கால் நினைவு, 4 வது ஆண்டு -நிலாசூரியன்
3)மும்முனைத் தாக்குதல் பெண்மை தாங்குமோ?(ஹுஜ்ஜா)
4) அலர் தீண்டிடா மலர்க்கொடியாள் - அனுசரண்
5) ஒருபேய் நிழல் - இ. பரமசிவன் ருத்ரா
***************************************************************************
வணக்கம்...
19/05/2013 அன்று வெளியான சிறந்த படைப்புகளின் தொகுப்பு இதோ...
=============================================
பொறுப்பான காதல் வாழ்க!! - சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா
அய்யய்யோ !
காதல் மிகப்பொல்லாததோ--அது
வெட்கம் மானம் இல்லாததோ!..
நன்றி கெட்ட பாவமதோ!
நாலுபேரின் கோபமதோ!
சுமந்து பெற்ற தாயைத் துறந்து
சுமந்து காத்த தந்தை பகைத்து,
வளர்ந்தோமென்ற திமிரெடுத்து,
வளர்த்த நன்றி மறக்கலாகுது!
கண்ணீரைப் பரிசளித்து.
கடன்பட்டோரைக் கலங்கவைத்து,
என்ன பயன் காணுவதோ!
பின்னும் ஏன் வருந்துவதோ!
வெட்கங்கெட்டுப் போனபின்
விட்டுத்தான் என்ன செய்ய!
மானங்கெட்டுப் போனபின்
மறந்துதான் என்ன செய்ய!
காதலை வேண்டாமென்று
கட்டாயம் சொல்லவில்லை!
வேதனைகள் நேராமல்
விளையும் காதல் வாழ்கவே
பொருந்துவது தேடிப்பார்தது
பொறுப்போடு காதல் செய்து
ஊரறிய உறவு சொல்லி
உலகறிய வாழ்க வாழ்கவே!
*************************************************************************
!!!===(((முள்ளிவாய்க்கால் நினைவு, 4 வது ஆண்டு)))===!!! ---(நிலாசூரியன்).
கரும்பழுப்பு மேக மூட்டங்களால்
சூழ்ந்த புகைமூட்டங்கள்..
புத்தி கதறியழ
மனதில் ரணமும், மரண பயமும்,
தத்தளித்தோம் பரிதவித்தோம்...
பாஸ்பரஸ் மின்னல்கள் பளிச்சிட
கண்களில் இருள் நுழைந்து
கர்ப்பகிரகத்தில் அமிலம் வீசி
எங்கள் முடிவுகளின்
கடைசி நிமிடங்களை காட்டியதே...
அப்பொழுதும் வரவில்லையே
எந்த கடவுளும்....
வெடிகள் இடியாக...
காது கிழிந்து, நெஞ்சு உடைந்து
சதை சகதிகளாகி
ரத்த ஆற்றில்
அடையாளமற்ற பிணங்களானோமே...
ஈமம் செய்வதற்கு
ஈனஸ்வரமில்லை
இத்துப்போன நெஞ்சினிலே
எஞ்சியது எதுவுமில்லை...
முப்படை கட்டியாண்ட
மூத்தக்குடி தமிழன்வேட்கை
முள்ளிவாய்காலோடு
முற்று பெற்றிடுமோ...
அணுகுண்டு ஆகுதியில்
அழிந்த ஆத்மாக்களுக்கு
ஆழ்ந்த இறங்கலென்ன
அரசியல் நாடகமோ...?
கயவனின் காலடியில்
கட்டுண்டு கிடப்பதென்ன...?
சுதந்திரமோ.... சுயநலமோ....
வஞ்சகத்தின் கழிவுகளில்
இழிவுகளை சுமந்துவிட்டாய்
உள்ளகத்தில் ஒளியேந்தி
இனியேனும் திருந்திவிடு...
உண்மையான தமிழனாக
உணர்வுகொண்டு எழுந்துவிடு
முள்ளிவாய்க்கால் தீயெடுத்து
உரிமை மீட்க சபதமெடு...!!!
*************************************************************************************************************************
மும்முனைத் தாக்குதல் பெண்மை தாங்குமோ?(ஹுஜ்ஜா)
காட்டிலே மணல் மேட்டிலே
கல்லறை ஓர் மண்ணறை.
இதயத் துடிப்பு அடங்கவில்லை.
இரண்டு கண்ணும் மூடவில்லை.
வெட்டும் குழி யாருக்கென்று
விவரம் அறியா பச்சைபிள்ளை.
பெண் குழந்தை பிறந்துவிட்டாள்.
மண் குழியில் புதைக்கப்பட்டாள்.
மஞ்சள் பூசும் கைகளாலே
மண்ணைத் தூவும் மாயம் என்ன?
உடலை மட்டும் புதைக்காமல்
உயிரைச் சேர்த்து புதைப்பதென்ன?
சமத்துவமாய் பெண்ணை நடத்தாமல்
சாக்கடையில் கொடியை விதைப்பதென்ன?
அள்ளிச் சூடும் மல்லிகையை
கிள்ளி எறிவது அப்பன்தானோ?
அண்டை வீட்டு அண்ணன்மார்கள்
ஐந்து வயது பெண்ணைக் கூட
அந்த சுகம் அனுபவிக்க
அலைக்கழிக்கும் அபலமென்ன?
ஆசான் என்று அவனை எண்ணி
அறிவைத் தேடி வந்த மாதை
பாசம் என்னும் தூபம் போட்டு
பள்ளியறை அழைப்பதென்ன?
அப்பன் ஆசான் அண்ணன் என்று
மும்முனைத் தாக்குதல் அறிந்ததுண்டோ?
பெண்ணின் வாழ்வில்
கண்டதுண்டோ?
உதிரத்தைப் பாலாக்கி
உலர் நாவில் தாலாட்ட
தாய் என்ற பெண் வேண்டும்.
அடுக்களையில் அமுதம் செய்ய
அன்பாலே அரவணைக்க
அக்காள் என்ற அவள் வேண்டும்.
தஞ்சம் வந்த தாரத்தோடு
மஞ்சம்தனில் இன்பம் காண
மனைவி என்ற துணைவி வேண்டும்.
விளைவின் விளைவாய்
விதியின் முடிவாய்
பெண்ணாய் குழந்தை
பெற்றாள் அவளும்.
பெற்றவளைப் பெட்டி தூக்கி
பிறந்த வீடு தள்ளுகிறாய்.
குற்றமற்ற பெண்மையினை
குத்திப் பேசி துரத்துகிறாய்.
அம்பை எய்த வேடனுக்கு
அறுசுவை உணவை படைத்துவிட்டு
நெஞ்சை பிழந்த அம்புதனை
நிந்திப்பதில் என்ன நியாயம்?
காசா பணமா கடையில் வாங்க
அன்பை ஒன்றே அவளும் நாட!
கதவு தட்டப்பட்டது அரவணைப்பைத் தேடி
அதுவோ திறக்கப்பட்டது உடல்வனப்பை நாடி.
ஓடிவிட்டாள் ஓய்ந்துவிட்டாள்.
உண்மையிலே செத்துவிட்டாள்.
பெண் பிணத்தையும் விட்டுவைக்கா
பேய்களிடம் மாட்டிக்கொண்டாள்.
மதுவை போன்று மாதும் ஒரு
போதை பொருள் போகப் பொருளென
விதியை நொந்து விட்டுவிட
வேண்டாம் என்பதே இறைவன் அருள்.
ஆணும் பெண்ணும் வேறுபாடு!
அதனால் வந்த பாகுபாடு!
வேண்டாம் இந்த முரண்பாடு!
போதும் பிராயசித்தம் தேடு!
**************************************************************************************************************
அலர் தீண்டிடா மலர்க்கொடியாள் - அனுசரன்
அலர் தீண்டிடா மலர்க்கொடியாள்
தளம் தப்பியதால்
தடம் மாறிச் சென்ற
தொடர்வண்டி போல்
என் வாழ்க்கை போக்கான தடி
மாற்றான் நிலத்தின்
மலரிலே கொங்கு தேர்
கொள்ள விழைந்த
அம் சிறை பெற்ற வண்டாய் நான்
வினவிய வினா அறிவாயோ
முனிவின்று சொல்லடி பைங்கிளி
யான் இன்புற வேண்டுமாய்
இருக்க சொலல் வேண்டாம்
அறிந்ததை மொழிவாயா
நின் கெழி இய காதலை
கேலிச் செய்தவனாய்
உன் மயில்இயல் மென்மையை
அடி இட்டு நசித்தேனடி
செறி எயிற்றுதனிலே
ஏந்திய புன்னகை யில்
என் பிழைக் கண்டும்
பொறுத்தாய் ஏனோ கண்மணி
தனித்திருக்கையிலே
நோம் உன் உள்ளம்தனை
சொப்பனத்தில் கண்டேனடி
என் அமைவில ஆகுதலினால்
தீயப் பன்ன சிறையிலே
நிர்பந்தித்துத் தள்ளப்பட்ட
மோனச் சிலையாய் நீ ஓர் சீதைதான்
ஊரார் வசை உழிந்திட
நள்ளென்றன்றே யாமத்தில்
சொல் அவிந்து நனந்தலையில்
துஞ்சம் அகன்று அடங்கினாயேனோடி
எனக்கென தவமிருந்த
கார்கால நிசிதனிலே
சாழை விளக்கும்
இமையிதழ் குவிக்க மறுக்கிறதா
தொடியோளின் கரமதில்
அவள் கன்னம் பதிந்திட
மெல்லடி எடுத்து மேலவும் சென்றிட
வாகை உழிஞ்சில்களும்
சோகம் பாடிடாதா
வேய் பயில் அழுவங்களும்
புல்லாங்குழல் வாசித்திடாதா
தீம்பழம் விளைந்து உகும்
மா அத்துகளும்
அவள் பசலையின் பைதலை
ஒப்பனை செய்திடாதா
சென்ற ஆறே நல்லோள் கணவன்
திரும்புதல் நிலையில்லை
என்று சிலேடித்துரைப்போரிடமும்
நாள் தொறும் பாடு இல
தெரிவை கழிலும் கண்ணொடு
புலம்பி உறைந்தாய் நம்பிக்கை ஏந்தி
வாழி என் நெஞ்சே
உனக்கெனத் தானே டா
வாடா என்னெழிலாளும் நாடா என
********************************************************************************************
ஒரு பேய் நிழல். - ருத்ரா
அடர்மரத்தின்
அடம்பிடிக்கும் கிளைகளின்
கூரிய நகங்கள்
வானத்தை கிழிக்கும்.
நீல ரத்தம்
மௌனம் பீச்சும்.
என்னை உமிழும்
நிமிடங்களில் எல்லாம்
காறி காறி விழுந்தது
ஒரு பேய் நிழல்.
மரம் அல்ல இது.
ஒரு விதையின் நிழல் இது.
கோடி சூரியன்களை
கருவுற்ற
இருட்டின் திரள்
இந்த நிழல்.
காற்று தூவிய அசைவுகள்
தூரத்து வெளிச்சத்தை
இப்படியா
கசாப்பு செய்யும்?
துண்டு துண்டுகளாய்
கனவுப் பிண்டங்கள்
மரத்தில் தொங்கின..
இதயம் வருடும்
அழகிய அமைதியின்
நினவுப்பாளங்களில்
எப்படி
இப்படி ஒரு
மன வெளிச்சித்திரம்?
மறக்க முடியுமா
இந்த மரத்தை?
எங்கள் மாணிக்க தருணங்கள்
இங்கு தான்
இன்னும் உதிர்ந்து கிடக்கின்றன.
சுற்றிச் சுற்றி வந்தோம்.
கட்டித்தழுவிக்கொண்டோம்.
இடையில் மரம்.
உயிர்த்து நின்றது.
நாங்கள் "மரத்து"நின்றோம்
ஹோ ஹ்ஹோ வென்று
பேரிரைச்சல்.
தலை தெறிக்க ஓடினேன்
நில்..நில்..
நில்லுடா நில்லுடா..
அப்புறம்
கேவல் நைந்த ஒலியின்
தீற்றுகள்.
அவள் குரல் தான்.
இவள் இறந்து போனதன்
ஆவி அல்ல.
அவள் இறக்கவில்லை.
இது யாருடைய ஆவி?
அன்று ஒரு அழைப்பிதழ் வந்தது
மஞ்சள் பூசிக்கொண்டு.
பிரிக்காமலேயே
தெரிந்து கொண்டார்கள்
என் பெற்றோர்கள்
என் பிணத்தை போர்த்த
வந்தது அது என்று.
அதில் காமகோடி அம்பாள்
அனுகிரஹத்துடன்
ரெண்டு பெயர்களுக்கு
"மாங்கல்யம் தந்துநானே"
இருந்ததில்
என் பெயர் இல்லை.
சோகம் பிழிய வேண்டாம்.
சளியில் ரத்தம் வேண்டாம்.
கன்னம் புடைக்க
நாளங்களுக்குள்
ஊமை நாயனம் வேண்டாம்.
நாங்கள்
இறக்கவுமில்லை.
வாழவும் இல்லை
ஆனாலும்
நாங்கள் பரிசுத்த ஆவிகள்.
நில்லுடா..நில்லுடா
இப்போது
நான் திரும்பி பார்த்தேன்.
மரம் என்னை
நோக்கி நடந்து வந்தது.
ஆம்.
நாங்கள் இறக்கவுமில்லை
நாங்கள் வாழவும் இல்லை
நாங்கள் பரிசுத்த ஆவிகள்
அந்த மரத்தைப்பார்க்கிறேன்.
இந்த
இலையுதிர் காலத்தில்
எலும்பு மரத்தின் அடியில்
அடர்ந்த இலைகளில்
ஊடுருவும் இதயங்களின்
படர்ந்த நிழல்.
*****************************************************************
நன்றி
நடுவர் குழு