மூடு மந்திரம் 3(தொடர் கதை)
அவன் சொல்வது அரைகுறையாக புரிய, ஆம்புலன்சுக்குள் எட்டி பார்த்தார் போலிஸ். வயிற்றுப் பகுதியில் ரத்தம் கொப்பளிக்க, இதோ போய்விட்ட உயிரோடு வெறும் உடம்பு மட்டும் மல்லாக்க கிடந்தது....மயிலும் எட்டி பார்க்க, அந்த பிணத்தை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அவர்களோடு சேர்ந்து அம்புலன்சுக்குள் எட்டி பார்த்தது... மயில் புரிந்து கொண்டான் வெளிறிய முகத்தில் வேதனை ரேகைகளை அடித்து விழும் மழை துளிகளால் அழிக்க முடியவில்லை. இதுவரை இப்படி ஒரு விபத்தை தன் வாழ்நாளில், தன் இத்தனை வருட டிரைவர் வாழ்க்கையில் அவன் செய்ததேயில்லை. வாழ்க்கை அவள் தான் என்று முடிவெடுத்த பின் இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தி வாழ்க்கையையே தொலைத்துவிட்டோமோ...
அவனின் எண்ணங்கள் அந்த இரு பிணங்களையும் ஈக்களாய் சுற்றியது....கூச்சல் கதறல் ட்ராபிக் இன்னும் பல காக்கிகள் சூழ்ந்து கொண்டார்கள்...
ஆம்புலன்ஸ் மோதி ஒருத்தன் காலி..... லேட் ஆனதுல உள்ள இருந்த பேசண்டும் காலி....இப்படி பொறுப்பில்லாத டிரைவரையெல்லாம் உள்ள தூக்கி போடனும்யா....
அது என் உயி...ர்........................
இது அவனா வந்து விழுந்துட்டான்...
பேசவும் முடியவில்லை...... பேசாமலும் முடியவில்லை...... சுழன்ற கண்கள், தளர்ந்த கால்கள் அவனை மயங்கடித்தது....... அந்த ஆம்புலன்ஸ் அவனின் எண்ணங்களில் ஆழ்மனதில் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது....ஒரு ரிவர்ஸ் பட்டனை அழுத்தியது போல அந்த காட்சி சரேலென பின்னோக்கி நகர, நாம் மெல்ல மயில்சாமி அனகா வாழ்க்கைக்குள் நுழைகிறோம் ........
காலை மணி 10
கத்திரிக்கா குழம்பு கலந்த சோறு.... டிபனை திறக்காமலே பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.....மயில்சாமி..... வழக்கமாக அவன் அமரும் இடம் தான்.....தொட்டுக் கொள்ள முட்டைப் பொறியல்..
காற்றோடு கலந்திருந்த ஆஸ்பத்திரி வாசம், ஒரு தீர்வில்லாத நெடியை தந்தபடியே இருந்தது.....அப்போது கேக்கும் ஆம்புலன்சின் சைரன் சத்தம் அடுத்த ஒரு வாழ்க்கையின் போராட்டத்தை அபாயகரமாக அறிவித்துக் கொண்டிருந்தது....அதைப் பற்றிய கவனமோ அக்கறையோ அவனிடம் இல்லை.....
இதே பொலப்புடா ராமசாமி...... தண்ணிய போட வேண்டியது, மப்புல எதுலயாது முட்டி நிக்க வேண்டியது..... நாம போய் உசிர குடுத்து வண்டி ஓட்டி காப்பாத்த வேண்டியது...............
நான் தூக்கிட்டு வர்றதெல்லாம் குடிகாரன் கேசுதாண்டா....கருமம், எழவு குடிச்சா மூடிகிட்டு படுத்துக் கெடக்கணும்.... அத வுட்டுட்டு பெரிய ஹீரோ கணக்கா ப்ளைட் ஓட்ற மாறி ஓட்றது ....... ப்ளைட்டே தொறந்துகிட்டு விழுகுது....அள்ளி அள்ளி வாய்க்குள் போட்டபடியேதான் பேசிக் கொண்டிருந்தான்......அவனை சுற்றி அந்த இடமெல்லாம் ஈக்களும் கொசுக்களும்..... சுவரின் ஓரத்திலெல்லாம் வெற்றிலை எச்சில்களும் ஒரு வித பாசம் பிடித்த ஈரப் பசைகளும்.....
ஐயோ...... போயிட்டியா..... இனி இந்த குழந்தைகளை வெச்சுகிட்டு எப்படி பொலப்பேன்.....கடவுளே..... கண்ணில்லையா.....ஒரு தாயின் அழுகை அல்லது ஒரு மனைவியின் அழுகை ......
ஸ்டச்சரில் வெளியே வந்தவனை கட்டிக் கொண்டவளின் தோற்றமும் புலம்பலும் அவனை ஈர்க்கவில்லை.....மறத்து போன மனநிலைக்குள் அவன் எப்போது தள்ளப்பட்டான் என்று யோசிக்கும் மனநிலையை எப்போது தவற விட்டான் என்று தெரியவில்லை.....
தொடரும்.....