ஆனி ஒன்று எண்பத்தி ஒன்று

நள்ளிரவு நிசப்தத்தில்
அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தது
யாழ் நகரம்.

பண்ணைக்கடல் அலையில்
நிலவு பொன்னைக் குழைத்து
பூசிக்கொண்டிருந்து.

முனியப்பர் கோவில் மூலையில்
முன்னெப்போதும் இல்லாமல்
சுடலைகுருவி-ஒன்று
ஒற்றையாய் கூவியது..

அவலம் நடக்க
போவது தெரியாமல்
அமைதியாக சல சலத்து
ஓடிக் கொண்டிருந்தது.
நகரின் கழிவு
நீர் வாய்க்கால்.

முதல் நாள்
சட்டசபை தேர்தல்
பிரசாரக்கூட்டத்தில்
பெரும்பான்மைக்கும்
சிறுபான்மைக்கும்
சிறு உரசல்.

காவலர்கள்
சகட்டு மேனிக்கு
சுட்டதில்
பெரும்பான்மை
ஒன்று பிணமானது.
கடுப்பேறி விட்டது
பெரும்பான்மை அரசுக்கு.!

"சுபாஸ்" விடுதியில்
இருட்டோடு இருட்டாக
அமைச்சர்கள்
ஆயத்தமானார்கள்
நெருப்பெடுத்துக்
கொடுப்பதற்கு!
மதுக்கோப்பைகள்
தள்ளாடின.

உசுப்பேத்திய போதை
தலைக்கேறிய காடைகள்
கட்டவிழ்ந்து
தெரு எங்கும்
தாண்டவம்ஆட தொடங்கின.

புத்தக கடைகள்,
பத்திரிகை காரியாலயம்,
நாச்சிமார் கோவில்,
வீடுகள்,கல்விக்கூடங்கள்
தீயில் தீய்ந்தன
எங்கும் மரண ஓலம்!

இன்னும் வெறி அடங்கவில்லை
இந்த கழுகுகளின் கண்களில்!
இறுதியில் நகரில் இருந்த
தமிழனின்தேசிய
அடையாளம்
தீயில் கருக தயாரானது.

ஆசியவின் தலைசிறந்த
நூலகத்தின்
மேற்கு வாசல் காடையர்களால்
கொள்ளி வைக்கப்பட்டது!

பெற்றோலும் மண் எண்ணெயும்
போட்டி போட்டு
ஓடிக்கொண்டு இருக்க
தீச்சுவாலை நாக்கு நீட்டி
அதை ஆவலுடன்
பருகிக்கொண்டிருந்தது..

சாம்பல் பறவைகள்
காற்றில் எழுந்து
துகில் இழந்த
யாழ் நகரை
போர்த்துக் கொண்டன.

நூலகத்தை எரிப்பதால்
தமிழன் திறமையைக்
கருக்கியதாய்
நினைக்கலாம்.. அவன்
ஆனால்..அந்த
கருமை படர்ந்த
அஸ்தமன விடியலின்
பின்பும் பிறந்து
கொண்டே இருக்கின்றன
எம் மண்ணில்
பல நூலகங்கள்..

எழுதியவர் : -சிவாநாதன்- (31-May-13, 10:15 pm)
பார்வை : 94

மேலே