பரிதவிக்கும் பஞ்சபூதம்
அடுக்கடுக்காய் தவமியற்றி,
அழிவினை பெற்ற அரக்கர் கூட்டம்
ஆழ்ந்த சிந்தனைக்குப்பின்
அருள் வேண்டி அமலன் பாதம் பற்றியது.
அரக்கர் பால் அருள் கொண்ட அமலனவன்
அழியா வரமொன்றைத் தவிர்த்து,
ஆகும் நல்வரம் தர உவந்தான்.
பஞ்ச பூதங்களில் கலந்துறையும் வரம் வேண்டி,
பக்தியுடன் பணிந்தது அரக்கர் கூட்டம்.
அன்பிற்கு அடிமையான அண்ணலோ
அக்கணமே ஈந்தான் அவ்வரத்தை.
ஆர்ததெழுந்தது அரக்கர்ச்சேனை
ஒலிபெருக்கியாய் வடிவெடுத்துக்
காற்றைக் கலக்கியது.
தெருவெங்கும் ஒலிக்கூச்சல் ,
செல்போனாய் செவியில் அமர்ந்தது.
அழகுக் குழந்தைப் பெற்றால் அலறியது.
பூப்படைந்தால் பொழுதெங்கும் ஓலித்தது.
மரண வீட்டில் ஒப்பாரி வைத்தது.
அமைதியும் ,அருளும் வேண்டுவோர்
செல்லும் ஆலயத்திலும்
பக்திப் பாடலாய்
பதறி ஓலித்தது.
காற்றில் கலந்தது அரக்கர் கூட்டம்.
பொன் விளையும் பூமியிலே
அரக்கர்ச்சேனை,
பூமியின் மூச்சுமுட்ட
பாலிதீன் பைகளாய் பரிமளித்தது.
கடைகளிலும் , கைகளிலும் ,
பரிசுப்பொருளிகளிலும் பாங்காய் கலந்து
பூமியின் சுவாசத்தை இறுக்கியது
பிளாஸ்டிக் குப்பைகள்
பூமியில் கலந்தது அரக்கர் கூட்டம்.
ஆலைகழிவாய், சாயநீராய்
அணுக்கழிவுகளாய் நீரைசூழ்ந்தது ,
குடிக்கும் மாந்தர் உயிரைக்குடித்தது ,
குளிர்பானமாய் குடலை எரித்தது.
நீரில் கலந்தது அரக்கர் கூட்டம்.
வாகனப் புகையாய் வானை மறைத்தது ,
டயர்க் கொளுத்தலால் சுவாசம் தடுத்தது ,
குண்டுகளாய் மனிதம் பறித்தது ,
கொழுந்து விட்டெரியும் குப்பைகளால்
நெருப்பும் இங்கே நிறம் மாறி
கருமைப் பெற்று காசநோய் தந்தது.
நெருப்பில் கலந்தது அரக்கர் கூட்டம்.
அடுத்தடுத்து ஊர்ந்துச் செல்லும்
ஆகாய விமானங்களாலும் ,
செயற்கைக்கோள் குப்பைகளை
வானில் எறியும் ராக்கெட் ஊர்திகளாலும் ,
அலறித்தவித்தது வானப் பிரபஞ்சம்.
வானில் கலந்தது அரக்கர் கூட்டம்.
அன்பினால் அறிவிழந்த ஆண்டவனால் ,
வந்ததிந்த தொல்லை இங்கு.
சான்றோரே, ஆன்றோரே ,
அறிவியல் ஆய்வாளர்களே,
ஆய்ந்தொரு வழி சொல்வீர்.
அழிவில்லா இந்த
அரக்கர் கூட்டம் அழிய !!!!