புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

இச்சோழன் பெருநற்கிள்ளி இராச சூயம் என்னும் வேள்வி செய்ததனால் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் சேரநாட்டில் சேரமான் மாரி வெண்கோவும், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், பாண்டிய நாட்டில் பாண்டியன் கானப்பேர் எயில் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஆட்சி செய்து வந்தனர். இச்சோழ மன்னனுக்கு சேரமன்னர் மாரி வெண்கோ நண்பர்.

ஒரு சமயம் பெருநற்கிள்ளியும், மாரி வெண்கோவும், உக்கிரப் பெருவழுதியும் நட்பால் ஒருங்கிருப்பது கண்டு ஔவையார் மகிழ்வுற்று, வானத்து உலவும் மீனினும் மாமழைத் துளியினும் உம்முடைய வாழ்நாட்கள் ‘உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக’ என்று வாழ்த்தினார். இன்னொரு சமயம் சோழன் பெருநற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் போர் உண்டாயிற்று. அப்பொழுது சோழற்குத் துணையாய் தேர்வண் மலையன் என்பான் சென்று இரும்பொறையை வென்று திரும்பினான்.

பாண்டரங் கண்ணனார் என்னும் சான்றோர் இவன் தன் பகைவர் நாட்டை யழித்த செய்தியைப் பாடிச் சிறப்பிக்கின்றார். கண்ணனார் என்பது இவரது இயற்பெயர். பாண்டரங்கன் என்பார்க்கு மகனாதலால் இவர் பாண்டரங் கண்ணனார் எனப்பட்டார்.

இப்பாட்டில் இவர் பெருங்கிள்ளியை நோக்கி, ‘முருகன் போலும் குருசில் நீ, பகைவர் நாட்டுள் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது ஒளி செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது. இவ்வாறு தீயிட்டுக் கொழுத்திய அந்நாடு ‘கரும்பல்லது நாடறியாப் பெருந்தண் பணை’ பொருந்திய நன்னாடு. ஆனால் நீ எரியூட்டிச் செய்த போரில் உன் களிறுகளும் உன் கருத்துக்கு ஒப்பப் போர் மலைந்தன’ என்று கூறுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக் 5

கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
துணைவேண்டாச் செருவென்றிப் 10

புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப் 15

பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே.

பதவுரை:

வினை மாட்சிய விரை புரவியொடு – போர் செய்யும் செயலுக்கு விரைந்து செல்லும் குதிரைகளோடு

மழை உருவின தோல் பரப்பி – மேக நிறத்தை ஒத்த கேடயங்ளையும் எடுத்துக் கொண்டு

முனை முருங்கத் தலைச் சென்று – போர் முனை கலங்க முன்னே சென்று

அவர் விளை வயல் கவர்பு ஊட்டி – அவரது நெல் விளையும் நிலங்களை வேண்டுமென்றே கொள்ளையடித்து

மனை மரம் விறகாக - அவர்களின் வீட்டிலுள்ள மரத்தால் செய்த கதவு, தூண் போன்ற பொருட்களை விறகாக்கி

கடி துறை நீர்க் களிறு படீஇ – மக்களும் விலங்குகளும் இறங்கி நீரைக் கெடுக்காதபடிக் காவலுள்ள ஊரார் உண்ணுநீர் நிறைந்த நீர்நிலைகளை களிறுகளை இறக்கிக் கலக்கி

எல்லுப்பட இட்ட சுடு தீ விளக்கம் – சிவந்த கதிரவன் காண மக்கள் குடியிருக்கும் ஊர்களை அழிக்க இடப்பட்ட தீயின் உயர்ந்து ஓங்கிய நெருப்பின் ஒளி

செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற – நெருப்புச் சுடர்க் கதிர்களைப் பரப்பும் கதிரவனின் செவ்வானம் போலத் தோன்ற

புலம் கெட இறுக்கும் வரம்பில் தானை – பகைவரது நாட்டை அழிக்கச் செய்யும் எல்லையில்லாத படையினையும்

துணை வேண்டாச் செரு வென்றி – உதவிக்கு வேறு துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும்

புலவு வாள் – பகைவரை வெட்டியதால் ஏற்பட்ட புலால் நாறும் வாளினையும்

புலர் சாந்தின் – வெற்றியினால் மார்பில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையும்

முருகற் சீற்றத்து உருகெழு குருசில் – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா!

மயங்கு வள்ளை மலர் ஆம்பல் – ஒன்றோடொன்று கலந்த வல்லைக் கொடியும், மலர்ந்த அல்லி மலர்களும்

பனிப் பகன்றை கனிப்பாகல் – குளிர்ச்சி தரும் பகன்றைக் கொடியும், பலாக்கனியும்

(பாகல் பலா என்றுரைப்பாரும் உளர்)

கரும் பல்லது காடு அறியா - கரும்பு அல்லாத பிற பயிர்கள் வயல்களில் விளையாத

பெருந் தண் பணை பாழாக - பெரிய குளிர்ச்சியும் நீரும் உடைய மருத நிலம் அழியும்படி

ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை – காவலை யுடைய நல்ல நாட்டை ஒளிரக்கூடிய நெருப்பை வைத்தாய்

நாம நல்லமர் செய்ய – அஞ்சத்தக்க போரைச் செய்ய

ஓராங்கு மலைந்தன பெரும – ஒருங்கிணைந்து உன் கருத்துக்கேற்ப பொருதின, பெருமானே

நின் களிறே – உன்னுடைய களிறுகள்

பொருளுரை:

போர் செய்யும் செயலுக்கு விரைந்து செல்லும் குதிரைகளோடு மேக நிறத்தை ஒத்த கேடயங்ளையும் எடுத்துக் கொண்டு போர் முனை கலங்க முன்னே சென்று அவரது நெல் விளையும் நிலங்களை வேண்டுமென்றே கொள்ளையடித்தாய்!

அவர்களின் வீட்டிலுள்ள மரத்தால் செய்த கதவு, தூண் போன்ற பொருட்களை விறகாக்கி, மக்களும் விலங்குகளும் இறங்கி நீரைக் கெடுக்காதபடிக் காவலுள்ள ஊரார் உண்ணுநீர் நிறைந்த நீர்நிலைகளை களிறுகளை இறக்கிக் கலக்கச் செய்தாய்!

சிவந்த கதிரவன் காண மக்கள் குடியிருக்கும் ஊர்களை அழிக்க இடப்பட்ட தீயின் உயர்ந்து ஓங்கிய நெருப்பின் ஒளி நெருப்புச் சுடர்க் கதிர்களைப் பரப்பும் கதிரவனின் செவ்வானம் போலத் தோன்றியது. பகைவரது நாட்டை அழிக்கச் செய்யும் எல்லையில்லாத படையினையும் உதவிக்கு வேறு துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் பெற்றாய்!

பகைவரை வெட்டியதால் ஏற்பட்ட புலால் நாறும் வாளினையும், வெற்றியினால் பூசிப் புலர்ந்த சந்தனத்தையும், முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா!

ஒன்றோடொன்று கலந்த வல்லைக் கொடியும், மலர்ந்த அல்லி மலர்களும், குளிர்ச்சி தரும் பகன்றைக் கொடியும் பலாக்கனியும், கரும்பு அல்லாத பிற பயிர்கள் வயல்களில் விளையாத பெரிய குளிர்ச்சியும் நீரும் உடைய மருத நிலம் அழியும்படி காவலையுடைய நல்ல நாட்டை ஒளிரக்கூடிய நெருப்பை வைத்தாய்! பெருமானே! அஞ்சத்தக்க போரை நீ விரும்பியபடி செய்ய ஒருங்கிணைந்து உன்னுடைய களிறுகள் யுத்தம் செய்தன.

திணை:

இப்பாடல் வஞ்சித்திணை ஆகும். மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைக்கொள்ளக் கருதி வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவருடன் போரிடுதல் வஞ்சித் திணை ஆகும். ’விளைவயல் கவர்பூட்டி, மனைமரம் விறகாகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம்’ என்றபடி விளையும் நிலங்களைக் கொள்ளையடித்து அவர்களின் வீட்டிலுள்ள மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி, ஊரார் உண்ணுநீர் நிறைந்த நீர்நிலைகளை களிறுகளை இறக்கிக் கலக்கி, மக்கள் குடியிருக்கும் ஊர்களை தீயிட்டு அழித்தல் போன்ற செயல்களைச் செய்வதால் இது வஞ்சித்திண ஆயிற்று.

துறை:

இப்பாடல் மழபுல வஞ்சித் துறை. ஏம நன்னாடு ஒள்ளெரியூட்டி யென்பதற்கேற்ப, பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுவதால் இது மழபுலவஞ்சித் துறையாகும்.

முடிவுரை:

போர் நிகழும்போது பகைவர் நாட்டு நெல், கரும்பு முதலியன விளையும் மருத நிலங்களைப் பாழ் செய்வதும், நீர்நிலைகளைச் சிதைப்பதும், மக்கள் குடியிருக்கும் வீடுகளையும், ஊர்களையும் தீயிட்டு அழிப்பதும் நிகழ்வது குறித்து இப்போர் நிகழ்ச்சி சான்றோர்களால் வெறுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறாக இதனைச் சான்றோர் விரித்து பாடலில் சொல்வது வேந்தன் உள்ளத்தில் அருள் பிறப்பித்துப் போரைக் கைவிடுத்தல் கருதி என்று அறிதல் வேண்டும்.
.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-13, 11:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 431

சிறந்த கட்டுரைகள்

மேலே