கிராம பயம் - சி.எம்.ஜேசு

பொழுது சாயும் நேரம் - எங்கும்
இருள் படர்ந்து பார்வையை ஒரு
பதம் பார்க்கும்
ஒத்தையடி பாதையில்
கத்தாழைகள் முளைத்திருக்கும்
கழனிச்செற்றில் தவளைகள் கத்தும்
குள்ள நரி கத்தும் சத்தமும் - காய்ந்த
சருகுகளில் பாம்பூர்ந்து செல்லும் சத்தமும்
காதை துளைக்கும்
நூறடி வீட்டுக்குள் செல்லவே
நொந்து நூலாகி - மனம்
இறுக்கத்தால் கனமாகிவிடும்
வெள்ளை நிலா வருவதற்குள்
எல்லையில்லா இனனல்களை
அனுபவித்து விட்டிருப்போம்
வரம்பு மீறிய மழைக்கு
வயல்வெளிகள் இரையாகும் பயம்
வற்றிப் போன கிணற்றினால் பயம்
வெட்டப்படும் வாய்க்கால்களால் பயம்
சுட்டரிக்கும் வெயில் பயம்
சுகமில்லா வீடு பயம்
பாதம் பதியா ரோடு பயம்
சாதமில்லாத கலி பயம்
தேவையில்லாத சண்டை பயம்
தேவைப்படும் பொருட்கள் கிடைக்கா பயம்
கழனி வெளித் துளைகளில் கைவிட்டு
நண்டேடுக்கப் பயம்
பள்ளிக்கூடம் சென்று பாடம்
கறக்கப் பயம்
இன்னும் எத்தனைப் பயம் .......