வளர் பிறை நிலவாய்
வளர் பிறை நிலவாய்
வஞ்சி என் நெஞ்சத்தில்
வற்றாத உன் நினைவுகள்..!
பால் நிலவைக் காண்கையில்
எல்லாம் நான் செய்த
பாக்யமாய் உன் உறவு..!
பகலும் என்னுடன் பகை கொள்ள
இரவும் என்னிடம் இம்சை செய்ய
உன் உறவிற்காய் உருகும் நான்..!
தொடரும் நாட்களில்
தொடவும் கூடாதென்றாய்..
தொலைவில் நிற்கையிலும்
தொல்லை செய்கிறாய்...!
அன்பின் வலி என்னை
உன்னருகில் இழுக்கையில்
அருகில் வந்தாலோ
அன்னியனாய் ஆகின்றாய்..!
நித்திரையில் கூட உன்
நினைவலைகள் தொடர..
சித்ரவதை செய்துவிட்டு
சிரித்துச் செல்கிறாயே..!
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ணாளா உனக்குக்
காலம் கூட இருக்கிறதா என்ன?
கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!
உறவென்று வந்தாய் என்
உள்ளத்தைத் தைத்தாய்...
உருகும் பனியாய்
உன் நினைவில் நான்..!!
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
இமைக்காமல் நீ உழைக்க
என் நினைவும் கூட
உனக்கு வருமோ என்று
நெகிழ்ந்தே நான் கேட்க...
நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்...!!