இதயத்தில் முதல் மழை

இதயத்துள் முதல் மழையாய் !
-
இதயத்துள் முதல்மழையாய்
இன்பத்தின் தேன்துளியாய் /
உதயத்தின் சுடரொளியாய்
உள்ளத்தில் நுழைந்தாயே /

ஆலின்விதை முளைத்தன்ன
அங்கமெலாம் விரிந்தாயே /
நூலின்பெரும் பொருளாக
நுகரும்வரைக் கதைப்பாயே /

தவிக்கின்றப் போதுகளில்
தாகத்தைத் தணிப்பாயே /
புவிக்கோளம் புரண்டாலும்
புரளாதப் பூமயிலே /

இனித்தாலும் கசந்தாலும்
புளித்தாலும் துவர்த்தாலும் /
கனியாகச் சுவைப்பாயே
கன்னியவள் என்னையுமே /

முற்பிறவித் தவப்பயனோ
முன்னோர்கள் புண்ணியமோ /
தற்செயலாய்க் கண்டேனே
தளிரிளமைப் பூங்கொடியை /

எனக்கான ஒருவாழ்க்கை
உனக்காகிப் போனதுவே /
நமக்காகப் பூவுலகே
நந்தவனம் ஆனதுவே /

ஒன்றானோம் நன்றானோம்
ஊனாலும் உயிராலும் /
என்றுமினி இந்தபந்தம்
இணையாகப் புகழ்பெறுமே !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (10-Jan-25, 9:33 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 5

மேலே