என் முதல் காதல்
இப்போது என் வயது 29. எனக்கு விவரம் அறிந்த நாள் முதல் அவள் மீது நான் காதல் கொண்டேன். பள்ளி பருவத்தில் அளவான பழக்கம் தான் இருந்தும் எனக்கு மற்றவர்களைவிட அவள்மீது தான் விருப்பம்.
பள்ளியில் நான் மற்றவர்களைவிட நன்கு அறிமுகமாக அவள் மட்டுமே முக்கிய காரணம். அவளுக்கு பன்முகங்கள் உண்டு அதை நான் பலசமயங்களில் வியந்ததுண்டு. அவளுக்கிருந்த பலமுகங்களில் சிலவற்றை எனக்கும் கற்பித்தால். அவள் புண்ணியத்தில் நானும் பள்ளி ஆண்டுவிழாக்களில் சில பரிசுகளை பெற்றதுண்டு அப்போதெல்லாம் அவள்மீதான என் காதல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கவே செய்தது.
கல்லூரி பயிலும் நாட்களில் அவள் இன்னும் நெருக்கமானால் என் நிறை குறைகளை நானே திருத்திக்கொள்ள அவள் காரணமாய் இருந்தாள். அவள் கொடுத்த அறிவும், எனக்குள் வளத்துவிட்ட தன்னம்பிக்கையும் என்னையும் மீறி என்கைகள் பேனாவை பிடித்தது. முதலில் சில நாட்கள் எழுதிய எழுத்துக்களுக்கு மற்றவர்களின் கேலிகளும் , கிண்டல்களுமே பரிசாய் கிடைத்தது. அவள் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறாள் எழுத்துலகில் மதிக்கபட்டவர்களை விட மிதிக்கபட்டவர்களே அதிகம் என்று அதனால் பொறுத்துக்கொண்டேன். என்றாவது ஒருநாள் நம் எழுதும் பாராட்டப்படும் என்ற நம்பிக்கை இருந்தது அந்த நம்பிக்கையை விதைத்தவள் அவள். நாட்கள் நகர்ந்தன என் எழுத்தில் இருந்த தவறுகளையும் , பிழைகளையும் அவபோது அவள் திருத்திக்கொண்டே தான் இருந்தாள், அதன் விழைவாய் என் எழுத்துக்களையும் சிலர் பாராட்டினார்கள் கதைகளையும் , கவிதைகளும் ரசித்தார்கள், முதல் அங்கீகாரமாய் என் கவிதை என் தோழியின் கல்லூரியில் தேர்வாகி அந்த கல்லூரியின் ஆண்டறிக்கை புத்தகத்தில் இடம்பெற்றது. அவள் கற்றுக்கொடுத்ததை தான் எனக்கு தெரிந்த வடிவில் என் கற்பனையில் கதையாகவோ, கவிதையாகவோ படைத்தேன், எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் அவள்மீதான பற்றும் , நேசமும் , காதலுமே தெரியவேண்டும் என்ற எண்ணன் எனக்கு உண்டு.
வளரும் வயதில் எழுத்துக்களை எனக்குள் விதைத்த அவள் , பட்டம் பயிலும் வயதில் கலையுலக கனவுகளையும் விதைத்தாள். சினிமா கனவுகளும் என்னைவிட வேகமாய் வளர்ந்தது அதற்கும் அவளே நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருக்கிறாள். எனக்கு மட்டுமல்ல என்னைபோல எழுத்துலகில் கால்பதிக்க காத்திருக்கும் நாளைய தலைமுறைக்கும் அவள்தான் நம்பிக்கை. கையில் கரன்சி இல்லா விட்டாலும், இவரு நம்ம ஆளுதான் என்று சொல்லி சிபாரிசு செய்ய ஆள் இல்லாவிட்டாலும் அவள் எனக்குள் இருக்கிறாள் நிச்சயம் எனக்குள் இருக்கும் கனவுகளை அவள்மூலம் நான் வெளிபடுத்துவேன்.
எனக்குள் இருக்கும் அவள், என் முதல் காதலான அவள் வேருயாரும்மல்ல இரண்டாயிரம் வருசத்துக்கும்மேலாக என் மக்களை பெருமைப்படுத்தி கொண்டிருக்கும் செம்மொழியான தமிழ் மொழி தான் அவள்.