புறநானூறு பாடல் 18 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இப்பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் ஆகும். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் முடிவேந்தர்கள் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மற்றும் வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரை தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.

இவனே, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை வென்று சிறைப்படுத்தியதும், வேள் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்கட்குரிய முத்தூர்க் கூற்றத்தையும் வென்று கையகப்படுத்திக் கொண்டவன் ஆவான். இவனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைத்த செப்பேடுகளில் உள்ளதாகத் தெரிகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வேறு, கோவலனைக் கொலை புரிவித்த பாண்டியன் நெடுஞ்செழியன் வேறு.

குடபுலவியனார் என்னும் சான்றோர் இப்பாண்டியனை இப்பாட்டால் சிறப்பித்துப் பாடுகின்றார். புலவியன் என்பது இவர் இயற்பெயர். குடநாட்டவராதலால், இவர் குடபுலவியனார் எனப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவன் என்றும் பொருள்படும்.

இப்பாட்டில், தாம் பாண்டிய நாட்டின் மேற்பகுதியில் வாழ்பவனாதலாலும், அப்பகுதி நீர்நிலையின்றி விளைநலம் குன்றி வாடுதலாலும், நீர்நிலை பெருக அமைக்க வேண்டுமெனப் பாண்டியற்கு உணர்த்தக் கருதி, ‘வயவேந்தே! நீ மறுமைப் பேறாகிய சொர்க்க இன்பம் வேண்டினும், இம்மையில் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாக’ என வற்புறுத்துகிறார்.

அரசனிடம் பொருட்கொடை பெறும் புலவர் பெருமக்கள், அவனிடம் பொருள் வளம் குறையாது மேன்மேலும் பெருகுதற்குரிய செயல்முறைகளை அவர்களுக்கு அறிவுறுத்துவது கடமையாகும். ஆதலால், இப்பாட்டில் குடபுலவியனார் நாடு வளம் மிகுவது குறித்து நீர்நிலை பெருகச் செய்க என இம்மன்னனுக்கு அறிவுறுத்துகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய 5

பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி 10

வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த 15

நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம் 20

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும் 25

இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. 30

பதவுரை:

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ – ஒலிக்கின்ற கடலால் முழுதும் சுற்றிச் சூழப்பட்டு

பரந்து பட்ட வியன் ஞாலம் – பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தை

தாளின் தந்து தம் புகழ் நிறீஇ – தனது முயற்சியால் உன்னுடைய புகழை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தி

ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல் - ஒன்றாக தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே!

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – ஒன்றைப் பத்து முறையாக அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசியாக இருத்திய

பெருமைத்தாக நின் ஆயுள் தானே – பெருமை யுடைய எண் அளவுக்கு உனது வாழ்நாள் பெருகட்டும்.

நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி – நீரின் மட்டத்திற்குத் தாழ்ந்த சிறிய காஞ்சியின்

பூக் கதூஉம் இன வாளை – பூக்களைக் கவரும் இனமாகிய வாளை மீன்களும்

நுண்ணாரல் பருவரால் – நுண்ணிய ஆரல் மீன்களும்

குரூஉக் கெடிற்ற குண்டு அகழி - ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்த ஆழமான அகழியினையும்

வான் உட்கும் வடி நீண் மதில் – வானம் அஞ்சும் அளவு உயர்ந்த அழகிய அரண்களையும்,

மல்லன் மூதூர் வய வேந்தே – வளமும் பொலிவும் உள்ள பழமையான ஊரினையுடைய வலிமையான வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் – உன் இறப்பிற்குப் பின் நீ போக விரும்பும் மறுமைப் பேறாகிய சொர்க்க உலகத்தை நுகரும் செல்வம் விரும்பினும்,

ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் – உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,

சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் – மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும்

மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதியாள – அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ செய்ய வேண்டிய தகுந்த செயல்களை இப்பொழுது கேட்பாயாக பெரியோனே!

நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம் – நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும் உடம்பிற்கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர்

உண்டி முதற்று உணவின் பிண்டம் – உணவை முதலாக வைத்து அவ்வுணவால் வளர்க்கப்பட்ட உடம்பு

உணவெனப் படுவது நிலத்தொடு நீர் – ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்

நீரும் நிலனும் புணரியோர் – நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள்

ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர் – இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவர்

வித்தி வான் நோக்கும் புன்புலம் – நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம்

கண்ணகன் வைப்பிற்று ஆயினும் – இடம் அகன்ற நிலப்பரப்பாயினும்

நண்ணி யாளும் இறைவன் தாட்கு உதவாதே - பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது

அதனால் அடுபோர்ச் செழிய – ஆதலால் கொல்லும் போர்த்தொழிலை உடைய செழியனே!

இகழாது வல்லே – இதனை அலட்சியப்படுத்தாது, விரைவில்

நிலன் நெளி மருங்கின் – நிலம் பள்ளமாக உள்ள குழிந்த இடங்களில்

நீர்நிலை பெருகத் தட்டோர் – நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை அமைத்து நீரைத் தேக்கி வேண்டுமளவு பயன்படுமாறு பெருகச் செய்தோர்

இவண் தட்டோர் – தாம் செல்லும் உலகத்து அறம், பொருள், இன்பம் மூன்றினையும் இவ்வுலகத்து தம் பேரோடு தளைக்கச் செய்தோர் ஆவர்

தள்ளாதோர் – அந்நீரைப் பெருகச் செய்யாதோர்

இவண் தள்ளாதோரே - இவ்வுலகத்து தம் பெயரைத் தளைக்கச் செய்யாதோர் ஆவர்.

பொருளுரை:

ஒலிக்கின்ற கடலால் முழுதும் சுற்றிச் சூழப்பட்டு பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத் தனது முயற்சியால் உன்னுடைய புகழை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தி ஒன்றாக தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே!

ஒன்றைப் பத்து முறையாக அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசியாக இருத்திய பெருமையுடைய எண் அளவுக்கு உனது வாழ்நாள் பெருகட்டும். நீரின் மட்டத்திற்குத் தாழ்ந்த சிறிய காஞ்சியின் பூக்களைக் கவரும் இனமாகிய வாளை மீன்களும், நுண்ணிய ஆரல் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்த ஆழமான அகழியினையும் வானம் அஞ்சும் அளவு உயர்ந்த அழகிய அரண்களையும், வளமும் பொலிவும் உள்ள பழமையான ஊரினையுடைய வலிமையான வேந்தே!

உன் இறப்பிற்குப் பின் நீ போக விரும்பும் மறுமைப் பேறாகிய சொர்க்க உலகத்தை நுகரும் செல்வம் விரும்பினும், உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும், மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும் அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ செய்ய வேண்டிய தகுந்த செயல்களை இப்பொழுது கேட்பாயாக பெரியோனே!

நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும் உடம்பிற்கெல்லாம் உணவால் வளர்க்கப்பட்ட உடம்பு உணவையே பொறுத்து என்பதால், உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர் எனப்படுகிறது. ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர் நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள் இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவர்.

நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலமானது இடம் அகன்ற நிலப்பரப்பாயினும் பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால் கொல்லும் போர்த் தொழிலை உடைய செழியனே!

இதனை அலட்சியப்படுத்தாது, விரைவில் நிலம் பள்ளமாக உள்ள குழிந்த இடங்களில் நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை அமைத்து நீரைத் தேக்கி வேண்டுமளவு பயன்படுமாறு பெருகச் செய். அப்படிச் செய்தோர் தாம் செல்லும் உலகத்து அறம், பொருள், இன்பம் மூன்றினையும் இவ்வுலகத்து தம் பேரோடு தளைக்கச் செய்தோர் ஆவர். அந்நீரைப் பெருகச் செய்யாதோர் இவ்வுலகத்து தம் பெயரைத் தளைக்கச் செய்யாதோர் ஆவர்.

விளக்கம்:

நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகவும் கொள்ளலாம்.

இப்பாடல் பொதுவியல் திணை ஆகும். வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை எனப்படும்.

துறை: முதுமொழிக் காஞ்சி. உயிரும் உடம்பும் படைத்தல் அறம். வேந்தர் தோள்வலி முருக்குதல் பொருள். நல்லிசை நிறுத்தல் இன்பம். நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை அமைத்து நீரைத் தேக்கி நீர்வளம் பெருகச் செய்வது அறம், பொருள், இன்பம் மூன்றும் பயக்குமெனக் கூறினதால் இது முதுமொழிக் காஞ்சி ஆயிற்று.

உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதலால் இது பொருண்மொழிக் காஞ்சித் துறை என்றும் கூறலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-13, 10:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7214

மேலே