பெத்த கடன் என்னாச்சு...

அன்று...

பூமா தேவியை கும்பிட்டு
கூடையில் கல் இழுத்து
பூமியில் குழி பறித்து
ஆழியில் சுனை கண்டோம்

எருதினில் ஏர் மாட்டி
தரையினில் வரி எழுதி
பாகமாய் பாத்தி கட்டி
பாசன வயல் அமைத்தோம்

கூனையில் நீர் இறைத்து
குறுகிய வாய் கடந்து
குறுநிலம் குளிர வைக்க
நாழிகையாய் நீர் பாய்த்தோம்

ஏற்றதாய் எரு போட்டு
மாற்றமாய் விதை ஊன்றி
தோற்றமாய் களை எடுத்து
பக்குவமாய் பயிர் வளர்த்தோம்

நஞ்சையில் நெல் விளைத்தும்
கரிசலில் பருத்தி யிட்டும்
செம்மண்ணில் கடலை எடுத்தும்
விதவிதமாய் விளைய வைத்தோம்

காலணியுமின்றி கால் பதித்தோம்
கிடைத்ததை பகிர்ந்துண்டு மகிழ்ந்தோம்
நடப்பதே நல்லதென்று நம்பியிருந்தோம்
இல்ல துன்பத்தில் துணையிருந்தோம்

இன்று..

முகத்தில் முதுமைச் சுருக்கங்களுமாய்
மூச்சினில் தளர்ந்த இறுக்கஙகளுமாய்
பேச்சினில் இயலா வர்க்கங்களாய்
வறுமைக்கோடுகள் இன்னுமாய் வயிறினில்

மகளின் திருமண கடனோடும்
மருமகளின் கடுஞ் சொல்லோடும்
காலந் தேய்கிறது நெடுநாளாய்
மறைந்த மனைவியின் நினைவோடு

மாதம் ஒருமுறை வரும்
பாச மகனின் பணவிடைக்காக
கண் விழித்து காத்திருக்காமல்
கடலை விற்கிறேன் கடைத்தெருவில்

கிடைக்கும் சில்லரை நாணயம்
கொஞ்சும் பேரப் பிள்ளைக்கும்
கொஞ்சம் தெரு பிள்ளையார்க்குமாய்
காலந் தள்ளுகிறேன் நடைபிணமாய்

மீண்டுமாய் கதவு வாசலில்
தலை விரித்த கோலமாய்
பெத்த மகள் கேட்கிறாள்
பெத்த கடன் என்னாச்சு..

- நெல்லை பாரதி

எழுதியவர் : நெல்லை பாரதி (10-Jun-13, 9:51 am)
பார்வை : 387

மேலே