நான் என்னை மறந்தேன்
எனக்கென்ன ஆயிற்று?
இப்பொழுதெல்லாம்
சில நாட்களாக
நான் நானாகவே இல்லை
நான் என்னை மறந்தேன்!
ஒருநாள்
மதிய வேளை
மாடிப்படிகளில் நான்
அமர்ந்திருக்கிறேன்,
குழம்பிய மனத்துடன்!
மேலே
.....மேலே
செல்ல வேண்டுமா
கீழே இறங்க வேண்டுமா
நான் என்னை மறந்தேன்!
இன்னொரு நாள்
மாலை வேளையில்
வீட்டின் கதவருகில் நான்!
நின்று கொண்டிருக்கிறேன்
குழம்பிய மனத்துடன்!
வீட்டிற்கு
உள்ளே செல்ல வேண்டுமா
வெளியே.... வெளியே....வெளியே....
செல்ல வேண்டுமா, கையில் பூட்டுடன்
நான் என்னை மறந்தேன்!
பிரிதொரு நாள்
இரவு வேளையில்
உணவுக் கூடத்தில் நான்
மென்று கொண்டிருக்கிறேன்
குழம்பிய மனத்துடன்!
கட்டிய பற்கள் எங்கே?
கண் கண்ணாடி எங்கே?
ஒன்று மேசையிலும்...
மற்றொன்று நெற்றியின் மேலும்
நான் என்னை மறந்தேன்!
எனக்கு
மறதி நோயாம்!
சொல்கிறார்கள் இது
முதுமையின் அடையாளம் என்று - மேலும்
குழம்பிய மனத்துடன்!