யாரடா ஊனம்..?
![](https://eluthu.com/images/loading.gif)
விலகி நீ போனாலும்
ஊட்டி விடும் சாக்கில்
உனை நான் தொடுவேனம்மா
உணவுதனை நீ
ஊட்டி விட்டாலும்
உனக்கு நான் திருப்பி
உணர்வுள்ள நம்பிக்கை
ஊட்டி விடுவேனடா
கைதியான வாழ்க்கையிலும்
கைகளை இழந்தாலும்
கைவிட மாட்டேனம்மா
கைதனை இழந்தாலும்
காலம் துரோகம் செய்தாலும்
மகனே!உன்னை
கட்டி காப்பேனடா
படுக்கும் முறை அறிந்து
பத்து மாதம் சுமந்து-நீ
பட்ட பாடு மறவேனம்மா
உறுப்பு ஒன்று போனாலும்
உன்னை நான் பெற்ற
உன்னதம் மகிழ்ச்சிதானடா
வடியும் விழியோடு
சிரித்து நான் பேசி-உன்
தோளிதனில் ஏறி
தொத்தி விளையாடுவேனம்மா
வாழ்க்கை வலிதானே
வலியும் சுகம்தானே
வாழ சொல்லி தருவேனடா
வாழ வந்தோரில்
வந்து போனோரில்
பிரம்மதேவன் நம்மை
பிறக்க வைத்து வஞ்சித்தானம்மா
கடின இலை போட்டு
கஞ்சி நாம் குடிக்க
அந்த நிலை கண்டு
ஆண்டவன் வருவானடா
கடவுள் வந்தாலே
காரி துப்பிவிட்டு-உன்
காலடி பணிவேனம்மா
களவு,கலவு இவ்விரண்டில்
நீ செல்வாயனில்
பாலை தரும் முலை
வெட்டி எறிவேனடா
மதியை தெளிவாய் செலுத்தி
மருதம் நிலம் விதைத்த
மானம் போற்றி காப்பேனம்மா
பட்டினி கிடந்தாலும்
பச்சை இளங்குருத்தே-உன்னை
படிக்க வைப்பேனடா
பட்டப்படிப்பு படித்து
பரீட்சை நானெழுதி
பலர் பசியை தீர்ப்பேனம்மா
உள்ளம் தான் மறந்து
ஊனப் பிறவி என்று
உலகம் சொல்லுதடா
அன்பை தான் மறந்து
இரக்க குணம் மறந்து
இன்பம் காண்பவனே
உலகில் ஊனமம்மா