என் மை பூசிய வாழ்க்கையின் சிறை விடுப்பு நியமனம்
மகள் கை நழுவி உருண்டோடிய
பணிமனை நியமனம் என்
மை பூசிய வாழ்க்கையின்
சிறை விடுப்பு நியமனம்
பத்தாம் வகுப்பிலே
எட்டாம் இடம்
வட்டத்திலே
கல்லூரி சேர
எட்டா தூரம்
முற்றத்திலே
படித்தது போதும் பாவையே
பிடித்திடு வீட்டை பேதையே
பறித்திடு நாளும் பூவையே என
மறித்திட்ட கூட்டம் மாயையே
பாவை படித்தென்ன இலாபம்
தேவை மாப்பிள்ளை ரோகம்
காவை குளிப்பாட்டி எந்தன்
நாவைத் திரை போட்ட வீணர்
திருமணம் சேர்ந்தது
இருமனம்
ஒரு மனம்
சிறு மனம்
மறு மனம்
தெரு மனம்
தெரு மனம் விரும்பிய
மறு மனம் தேடி
திரு மன(ண)ம் பறந்தது என்
சிறு மனம் கரைந்தது...
தாலி வெட்டி
ஆனேன் வாழா வெட்டி
காவி கட்டி ஆனேன்
பூக்கும் பெட்டி
வயிற்றிலே ஒரு உயிர்
அதை நினைத்தே போகவில்லை
பூவை உயிர்
நாளும் பெற்றோர் சாபம்
எனக்கில்லை அவர் மேல்
துளி கோபம்
கிணற்றுத் தவளையாய் அவர் மனம்
உணர்த்திய உண்மைகள் பல தினம்
மாற்றியது எனை
உரு மாற்றியது துணை
கன்று எனைப் போல்
வாழைத்தண்டு
அதன் திறன் கண்டு
மனம் உரம் கொண்டு
அவள் புவி மாற்றினேன்
புது உரு மாற்றினேன்
உரு உரம் ஏற்றினேன்
பெறும் நிலை காட்டினேன்
துளிர் விட்டது நம்பிக்கை
தளிர் அவள் போதும் கிணற்று
தவளைகளைக் காக்க
நான் பார்க்க கிணற்று
வீணர்கள் நோக்க
மகள் கை நழுவி உருண்டோடிய
பணிமனை நியமனம் என்
மை பூசிய வாழ்க்கையின்
சிறை விடுப்பு நியமனம் ………
.