அங்காடிப் பட்சிகள்-கே.எஸ்.கலை

பள்ளி இடைவிலகளோடு
பசிப்போக்கப் போராட
பட்டணத்தை நோக்கிப்
பறந்து வந்த
பாவப்பட்ட பட்சிகள் !

இரவும் பகலும் உருளும்
இயந்திரமாய் எமையாக்கி
உறிஞ்சி உறிஞ்சி – எம்
உதிரம் சப்புகிறது அங்காடி;
உரிமையாளனும் கட்டிடமும்
இன்னும் உயர்வதற்காய் !

செய்யா தப்பிற்கும்
கன்னத்தில் ஐவிரல் சித்திரங்களோடு;
மனிதம் செத்த மாக்கள் மேய்க்கும்
மக்களாகிப் போகின்றோம்-
மட்கிப் போன கனாக்களோடு !

அவர்கள் - மகிழ்வோடு சுற்ற
மகிழூந்து துடைக்கவும்...
காலணி மினுக்கி,
காரி உமிழுமிடம் கழுவிப் போடவும்;
ஊரிலிருந்து ஓடிவந்து-
கொத்தடிமைகளாய்ச் செத்து மடிகின்றோம் !

சிறுநீருக்கும் தேநீருக்கும் கூட
அனுமதி வேண்டி அங்கலாய்கிறோம்!
சதா ரணம் சாதாரணமாகிப் போக
சாதம் உண்ணும் வேளையிலும்
சக்கை உண்டுச் சாகின்றோம் !

கந்தலானாலும்
கண்களைக் கசக்கிக்
கட்டிக் கொள்கின்றோம்- அகத்துள்
நெருப்போடும் வெறுப்போடும்,
ஆடையகத் தொழிலாளிகள் என்ற
அடையாளங்களுடன் !

இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே !

நிமிர்ந்து நடக்கும் போதே
கூன் விழுந்த வாழ்க்கை...
நேர்ப்படும் நேரம் சொல்ல
யாருமில்லை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (11-Jun-13, 8:42 am)
பார்வை : 249

மேலே