மரணித்தவன் பேசுகிறேன்!

தமிழீழக் குடிமக்களே
தாகங் கொண்டவன்
தரைக்குள் இருந்து பேசுகிறேன்

மண்ணின் சுமையோடு
மக்கிய உடலோடு
மங்காத இலட்சியத்தோடு
மரணித்தவன் பேசுகிறேன்

கார்த்திகை இருபத்தியேழில்
காந்தள் மலருக்கு ஏங்கி
கல்லறைக்குள் இருந்து பேசுகிறேன்

மரணத்தை சுவாசித்து
மண்ணை நேசித்து
மண்டியிட்டு முத்தமிட்டேன்
மண்ணே என்னை
முழுவதும் முத்தமிடுவதாய்
உணர்கிறேன் கல்லறைக்குள்

தாயின் கருவறையில் பெற்ற
இளஞ்சூட்டின் சுகம்
தாய்மண்ணுக்குள் துயிலும் போது
மீண்டும் காண்கிறேன்

கனமழைக்கு மத்தியில்
காட்டுப் பனைமரத்தில்
கத்தி கொண்டு
குத்தி எழுதிய
எனது பெயர் இன்னும் இருக்கிறதா?
கொஞ்சம் பார்த்து வந்து சொல்லுங்கள்

பாசறையில் நான் வளர்த்த
பனங்கன்று இப்போது
பத்தடி வளர்ந்திருக்குமே?
பார்த்து வந்து சொல்லுங்கள்

மாவீரன் கல்லறைக்கு -நான்
மாலையிட மலர்தந்த
செம்பருத்திச் செடி இன்னும் இருக்கும்
என் கல்லறைக்கும் அதனிடம் சென்று
மலர் வாங்கி வாருங்கள்

ஆழிப் பேரலையில்
அள்ளி முகங்கழுவி
ஆடிப் பாடிட
ஆசை வருகின்றதே

ஆடிக்கூடி வந்தமர்ந்து
அள்ளி சோறு தின்ற இடம்
அப்படியே இருக்கிறதோ -இல்லை
அழிந்து போனதோ?
ஆசை தோன்றுகிறது பார்ப்பதற்கு

நமக்கென்று ஒரு
நாடு உருவாகுமென
நம்பிக்கை கொள்ளுங்கள்
நமக்குள் பிளவுகள் வேண்டாம்
ஒற்றுமையோடு செயற்படுங்கள்
சோர்வுகள் வேண்டாம்
முனைப்போடு செயற்படுங்கள்

உலகெங்கும் சுற்றும் தமிழனே
உமக்கென்று நாடுபெறவே
உயிர் தந்தோம்
உருகி காற்றில் கரைந்தோம்

ஒரு தமிழன் கூட அகதியென்று-இனி
ஒருபோதும் சொல்ல வேண்டாம்
உங்களுக்கு ஓர் தாய்நாடு உண்டு
நீங்கள் தமிழீழ குடிமக்கள்

காட்டிக் கொள்ளாமலிருக்க
களவாணிகளா நாங்கள்?
காலம் மாறும்
கரிகாலன் படையவனென்பதை
மார்தட்டி சொல்வோம் ஓர்நாள்

எழுதியவர் : வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார் (11-Jun-13, 10:40 pm)
பார்வை : 102

மேலே