இதையும் ஒரு கவிதையாக..! -ஆனந்தஸ்ரீ

எழுதச் சொல்லி நெருக்குகிறது
இரைந்துகிடக்கும் கவிதைகள்..,
எழுதத்தெரியாதென மறுத்தாலும்..!
என்னிடம் சில காற்புள்ளிகளும்
அரைப் புள்ளிகளுமுண்டு
கூடவே சில கமாக்களும்
ஆச்சரியக்குறிகளும்..,
கவிதைகள் எழுத
இவைமட்டும் போதுமா..?
கருக்கள் வேண்டாமா..?
இரைந்து கிடக்கும் கவிதைகள்..
என்னைப்பார்த்து
கேலி செய்கின்றன..,
கவிதையெனப்படுவது எது.?
வார்த்தைகளைக் கோர்ப்பது
வரிகளை சிதைப்பது..,
பொருளை விளங்கிக்கொள்வது
படிப்பவன் திறமை..
நீயும் எழுது..!
இரைந்து கிடக்கும் கவிதைகள்..?
நம்பிக்கையூட்டுகின்றன.
நானும் எழுதத்துவங்குகிறேன்.
இதையுமொரு கவிதையாக..!