என் தந்தை நாளுமொரு வியப்பின் விந்தை
கருவுற்ற சேதி கேட்டு
பெண்ணுருப் பெற்ற சேதி கேட்டு
கலங்காத என் தந்தை......
நான் பிறந்த முதல் நாள்
வாழைத் தோப்பிலிருந்து
வான் பறக்கும் பட்சிகள் போல்
தேன் சுவைக்கும் வண்டுகள் போல்
கார் மேகம் கண்டு
தோகை விரிக்கும் மயில் போல்
உள்ளம் மகிழ்ந்து
பள்ளம் குழி குண்டு
எல்லாம் கடந்து
வில் விடுபட்ட அம்பாய்
துள்ளி வந்த என் தந்தை.....
எனை வாரியெடுத்து
நீதானென் குல விளக்கு
வாழ்வின் ஒளி விளக்கு
என மார்போடு அனைத்த
என் தந்தை......
மண் பார்த்து நடக்கும்
பெண் பிள்ளைக்கு
விண் தொடும் கல்வியெதற்கு
என்று ஏசிய
ஏளனம் பேசிய
மாந்தர் வாயடைத்து
கல்விக்கண் திறந்த என் தந்தை....
கரும்பும் காயும் விற்று நான்
விரும்பும் யாவும் அளித்து
கூழும் கழியும் குடித்த
வாழும் கடவுள் என் தந்தை....
தானுடுத்த சான் கோவணம்
நானுடுத்த பட்டுத் தாவணி
நானுடைத்து
வீணடித்த போதும்
நான் சிரிக்க தன்
ஊன் வருத்திய என் தந்தை.....
மகள் கல்லூரி புக
அவள் தன் கையில் எழ
புகழ் எந்நாளும் பெற
துளி சலனமும் இல்லாமல்
உழும் காட்டை விற்ற என் தந்தை.....
நான் கை நீட்டிய
என் மனம் பூட்டிய
ஆண் மகனை
தன் மருமகனாக்கிய என் தந்தை....
நான் பெண் என்ற
வாழைக்கன்றீன்ர போது
உள்ளம் மகிழ்ந்து
பேத்தி கை பிடித்து
நாளும் நடை பழக்கும்
என் தந்தை....
பெண் சிசுக் கொலை
பெண் கொடுமை
பெண் கல்வி பறிப்பு
பெண் அடக்குமுறை
பெண் சுதந்திரம் பறிப்பு
பெண் மறுமணம் எதிர்ப்பு
பெண் கருத்து மறுப்பு
என பெண் வாழ்வை
கூரிடும் ஆண்கள் கூட்டத்தில்
என் தந்தை நாளுமொரு
வியப்பின் விந்தை.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
