வாழ்த்தினால் பெருமை
உணவே உயிராகுது உலகில் உயிர்களுக்கு
உள்ளவரை உய்த்திட வழிவகை வகுக்கிறது !
இளமையில் உண்பதே இறுதிவரை வலிவு
இல்லாமல் போவதே பொலிவில் நலிவு !
முதுமையில் தேவை முப்பொழுது உணவு
முழுதாய் பெறுவதோ இப்பொழுது கனவு !
உழைத்து தேய்ந்த தேகமோ வாடுதுஇங்கு
பிழைத்து வாழ தொட்டியில் தேடுதுபசிக்கு !
உதறிய உறவுகளால் உள்ளங்கள் கதறுது
ஊரறிய பிரிந்ததால் இதயங்கள் கருகுது !
முதியோரை விரட்டிடும் மூடர்களே கேளீர்
வயோதிகம் வந்திடும் உமக்கும் பாரீர் !
மூத்தோரை வணங்கி காத்தலே கடமை
முதியோர் நம்மை வாழ்த்தினால் பெருமை !
பழனி குமார்