உண்மை மட்டுமே உண்மை
கதை ஒன்று சொல்லியே
கவிழ்த்துப் போடுவான்
விதி எனது என்றே
வேடனாய் வலை விரிப்பான்
எல்லோருக்கும் வாழ்க்கை உண்டு
எல்லோருக்கும் அதில் ஒரு கதை உண்டு
ஆறுதல் உன்னிடம் தேடுவதாய்
ஆரம்பிப்பான் அப்புறமாய் உன்னை
அலைக்கழிப்பான்
முதலில் மரியாதை சொல் ஓங்கும்
அடுத்ததாக தவறான
சொல்லொன்றைத் தூவிப் பார்ப்பான்
கேடு விதையை
ஈர நிலமாய்
நீ ஏற்றுக் கொண்டால்
உன் மனமெங்கும்
முட்செடிகள் முளைக்குமம்மா
வெட்ட வெட்ட வீழாது
விளை நிலம் வீணாகுமம்மா
நீங்க நாங்க என்பான்
பின் நீ நான் என்பான்
அப்புறம் டி என்றே அழைக்கலாமா
என்றே தான் நூல் விடுவான்
ஊசி நீ இடம் கொடுத்தால்
ஊர் பேசி விடும் உன் வாழ்க்கை
யோசித்துப் பாரம்மா
இது மாய உலகம்
மனதில் வையம்மா
நிரந்தரமே என்றும் மகிழ்ச்சி தரும்
நிலையற்ற இந்த சுகம் உனை
நிர்கதியாய் நிறுத்தி விடும்
நற்கதி நீ தேடம்மா
தெளிந்த திட மனது வேண்டுமம்மா
இலை விழுந்தாலும் சலனமுறும்
இதயம் நல்லதில்லையம்மா
இமயமே சரிந்து விழுந்தாலும்
தாங்கும் உன் தோள் வலிமை
உணர்ந்து கொள்ளம்மா
வாய் சொல்லில் பாய் விரிப்பான்
வந்தவரை லாபம் என்பான்
நிரந்தரம் எது என்றே
நிறம் தரம் பிரித்துப் பாரம்மா
எந்த மாயப் படகும் உனைக் கரை சேர்க்காது
எந்த நேயத் துடுப்பும் உனக்குத் துணை வராது
துணிந்து நீச்சல் கற்றுக் கொள்ளம்மா
துன்பக் கடலில் அதுவே உனக்குத் துணையம்மா..!