ஒரு வாய் தண்ணீர்

******ஒருகுவளை நீர்கேட்டால் கொடுக்க மனம்வாராதா?

தீபாவளி பொங்கல் திருவிழா படையல்என
ஏகமாய் நாமும் கொண்டாடிய அதேவேளை
தாகத்திற்கே பிறந்தவர் தண்ணீருக்கே தத்தளித்து
சோகமே வாழ்வாக சோர்ந்திருந்தார் இதேஉலகில்

பிள்ளைகளும் போய்வருவர் பலமைல்கள் பலமுறைகள்
தள்ளிய குப்பைபோல தேங்கிநிற்கும் தண்ணீருக்கே
அள்ளியே அதைக்குடிப்பர் அனாதைச் சமூகத்தார்
கள்ளிச்செடி ஆனார் கைகொடுக்க யாருமில்லை

கோடியிலே ஒருத்தருக்கு இந்நிலையென எண்ணாதீர்
ஆடிவிடும் கேட்டாலே பலலட்சம் மனிதர்கள்
நாடுதழுவும் துயர்தாண்டி நாநிலத் துயர்இதுவே
கேடுகெட்ட நீர்குடித்து காலமானோர் கணக்கதிகம்

பருகிய நீராலே பலநோய்க்கு உள்ளானார்
சருகாகிப் போகின்றார் சாதிமத பேதமில்லை
உருகாமல் உதவாமல் உலகஉருண்டை உருளுதிங்கே
கருகும் மனிதனுக்கு மனிதனில்லா மனிதம்இது

ஐபியல் போட்டியோ அதிரவைக்கும் திரைப்படமோ
செய்தொழிலோ சீரியலோ சின்னச்சிறு வம்புகளோ
வையத்து வேலைகள் யாதாயினும் நிறுத்திவைத்து
ஐயோவென மனதும் அரைநொடியும் பதைக்கலையோ?

****** ஒருவாய் நீர்கேட்டும் கொடுக்கவில்லையே என்று!

**********************************************************************
இந்தக் கவிதையை கிழே இருக்கும் இணைய தளத்தை பார்த்த பிறகு படிக்கவும். முழு முகவரி தர இந்தத் தளம் அனுமதிக்கவில்லை.
waterforward charitywater

எழுதியவர் : புதுயுகன் (29-Jun-13, 7:20 pm)
பார்வை : 119

மேலே