கண்டுகொண்டேன்..! - ஆனந்தஸ்ரீ

வறுமையை வீட்டில்விட்டு
வழமையை தளர்த்திவிட்டு
கைப்பையை தோளிலிட்டு
கைக்குழந்தையை காப்பகத்தில் விட்டு

நெரியும் பேருந்தில்
அமர்விடம் தேடி தவித்து
முதுமைக்கு முன்னுரிமையளித்து
நசுங்கி கசங்கிப் பயணித்து
அலுவலகம் சென்றபோதும்..,

தாய்மையின் சிறப்பை
தலைமேல் வைத்துக்
கொண்டாடும் நாடென
தலைநிமிர்ந்து நடந்திட்ட போதும்..,

சகோதரிக்கொரு துன்பமெனில்
சண்டமாருதமாய் கிளம்பும்
சகோதரர் நிறைநாடென
ஆறுதலாய் தேறுதல் கொண்டபோதும்,

“இம்மையில் பெண்ணாய்
ஈனப்பிறவியாய் படைத்தாய்
இறைவா..!
மறுமையிலாவது எம்மை
மனங்குளிர வை..” எனக்கோரி
கோவிலுக்கு சென்றபோதும்..,
கண்டுகொண்டேன்...!

அருவெறுப்பான உரசல்களும்..
நெஞ்சுக்கு நேரான பார்வைகளும்
கண்நிறைந்து வழியும் காமமும்
கைதொட்டு அளித்த பிரசாதமும்..,

முன்னிருப்பவள் ஒரு
பெண்ணென்பதைத் தவிர
இந்த ஆண்களின் மனதில்
வேறொன்றுமே இல்லையென.!

எழுதியவர் : ஆனந்தஸ்ரீ (1-Jul-13, 2:25 pm)
பார்வை : 211

மேலே