கெளரவங் காத்தவள்

கெளரவங் காத்தவள்

தோடறுத்துச் சென்று
புறத்தோல் தின்றவன் கணவனெனினும்
காதறுந்த நிலையிருந்தனளாயினும்

கஞ்சிக்கென சுமந்த சட்டியின்
குறைவிலா கனம்
சிரம் துளைத்தெறிந்திடினும்

குடும்பக் குலப் பாவையென
மற்றோர் செல்வந்தன் மகள்
பிறன் மனையென ஆனவள்

புனல்வழிந்த கண்களில்
எய்தினாள் இரவுக்கவிப் புலம்பல்

ஆதாளி காசினியில்
அன்பிற்கேங்கிடும்
அடிமையிவள் ஒரு கதியிலியாய்

உமியாய் சதை பிரிய
ஊடகமில்லா மசக்கைச் சொன்னது
அவள் கருவுற்றனள் என

தெந்தனம் தழுவியும்
திரைச்சீலை மார்பு விலகாது
நத்தையென தானே சுமந்தனள்
தன்கூட்டை சென்றவிடவெல்லாம்

நாளையகனவிலே
பனி கிரணங்கள் உடைய
சந்திரன் பிறப்பானென
சுமையினைத் தழுவியே பெயரிட்டாள்

நிசிசரன் மடுவில் சிறையிடப்பட்டும்
இருதிறல் மனத்தால் நடத்தை சாகாது

மதலையின் குதலையே
பிறவி இலட்சியமெனத்தாங்கி
சகடத்தில் சிக்கி சங்கடத்தில் மாண்ட

எரியுமி ழுரகும் கயவப் பெருமகன்
கரம்விட்டக்கண்ணாளனவன்
குலம்குடி செழித்திடக் காத்தவ ளின்று

கெளரவங் கொண்டாள் இவள்
தான் பத்தினியெனச் சொல்லி

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (3-Jul-13, 12:15 am)
பார்வை : 244

மேலே