கரும்புலிகள் தினம் (ஜூலை 5)

நெஞ்சமதில் அண்ணன் பெயரெழுதி
நேர்மையின் நெறி பிறழாமல்
பொன்மேனி பிச்செறிந்து
அண்ணன் வழி நடந்த
ஆவாரங் கொழுந்துகளே!

மில்லர் வழியோடு
வழியும் விழியோடு
வலியும் சுகமென
முன்சென்று பின்னழைத்த
முத்துமணி மாலைகளே!

வீரம் நிலைநாட்ட
எதிரி புறம் காட்ட
சூழ்ந்த பேயோட்ட
எடுத்தீர்களே உயிர் சாட்டையை

எத்தனை எத்தனை
கடிதங்கள் வடித்து அனுப்பினீர்கள்
கரும்புலியாவதற்கு!
இலட்சியத்திற்காக உயிர் துறக்க
அத்தனை அத்தனை ஆசைகளோ?

இறுதி விடைதனில்
தோழர்களின் தோளணைப்பையும்
பிரிவுக் கையசையும்
பெற்றுக் கொண்டு சென்றீர்களே!

தாகம்தான் தணியாமல்
வேகம்தான் குறையாமல்
வெடி சுமந்து சென்றீர்களே!

அடர்ந்த காட்டுக்குள் இருந்து கொண்டு
அண்ணன் உருவாக்கிய
தாக கோசத்தைத் தானே
சொல்லிச் சொல்லி வெடித்தீர்களே!

ஈன்ற தாய் மண்ணுக்கு
இந்நுயிரை கொடை தந்து
இலக்கின் மடை திறந்து
இலட்சியத்தின்
இலக்கணமானீர்களே!

மனதை கல்லாக்கி
தடையை பொடியாக்கி
உடலை வெடியாக்கி
உருக்குலைய வைத்தீர்களே
உலகை வியக்க வைத்தீர்களே!

பயங்கரவாதியென உமக்கு பெயரிட்ட
சுயநலவாதி உலகிற்கு
மனிதமென மனம்விட்டு
உங்கள் மனஉறுதியின் ஆழத்தை
உய்த்தறிந்து கொள்ள துணிவுண்டோ??

எழுதியவர் : வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார் (2-Jul-13, 9:28 pm)
பார்வை : 539

மேலே