மகாத்மாவுக்கு ஒரு பதில் (டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்)- பகுதி-2
![](https://eluthu.com/images/loading.gif)
மகாத்மாவுக்கு ஒரு பதில்.
**************************************
டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்.
மகாத்மாவின் கூற்றுகளின் உட்பொருளை ஆராய்வோம், மகாத்மா கூறும் முதல் விஷயம், நான் மேற்கோள் காட்டும் நூல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பதாகும்.
சாஸ்திரங்களை நான் முற்றும் அறிந்தவன் அல்ல என்பதை ஒப்புகொள்கிறேன், ஆனால் நான் மேற்கோள் காட்டியவை எல்லாம் சமஸ்கிருத மொழியிலும் இந்து சாஸ்திரங்களிலும் வல்லவர் என்று எல்லோராலும் ஏற்கப்பட்ட காலஞ் சென்ற திலகரின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
அதற்காக சாஸ்திரங்களுக்கு ஞானிகளே பொருள்கூற வேண்டும், பண்டிதர்கள் கூறக்கூடாது, ஞானிகள் புரிந்துகொண்ட வகையில் சாஸ்திரங்கள் சாதியையோ தீண்டாமையையோ ஆதரிக்கவில்லை என்கிறார், நான் மகாத்மாவிடம் கேட்க விரும்புவது, சாஸ்திரங்கள் இடைச் செருகல்களாகவும் வேறுபாடான முறையில் ஞானிகளால் பொருள் கூறப்பட்டதாகவும் இருந்தால் என்ன பலன்?.
பொது ஜனங்களைப் பொருத்தவரை அசல், இடைச்செருகல் இரண்டும் ஒன்றுதான், ஏனென்றால் அவர்களுக்கு சாஸ்திரங்களின் உட்பொருளை தெரிந்துகொள்வதற்கான படிப்பு கிடையாது.
அவர்கள் தமக்குச் சொல்லப்பட்டதைப் பேசாமல் நம்பி வந்துள்ளார்கள், அவர்களுக்கு சொல்லப்பட்டதெல்லாம் சாதியையும் தீண்டாமையையும் கடைபிடிப்பது மதக்கடமை என்பதற்கு சாஸ்திரங்களே ஆதாரம் என்பதுதான்.
ஞானிகளை எடுத்துக்கொண்டால் வெறும் பண்டிதர்களின் நூல்களைவிட அவர்களின் போதனைகள் என்னதான் வேறுபாடாகவும் உயர்வனவாகவும் இருந்தாலும் அவை அறவே பயனற்றவையாக உள்ளன.
இதற்கு காரணம்.
1. எந்த ஞாநியுமே ஒருபோதும் சாதி அமைப்பை தாக்கியதில்லை, மாறாக அவர்கள் சாதி அமைப்பை தீவிரமாக நம்பியவர்கள், அவர்களில் பெரும்பாலோர் அவரவர் சார்ந்த சாதியின் உறுப்பினர்களாகவே வாழ்ந்து இறந்தவர்கள்.
ஜெயந்தேவ் என்பவர் தன் பார்பன அந்தஸ்தில் எந்த அளவுக்கு தீவிர பற்றுக் கொண்டிருந்தார் என்றால் பைதானைச் சேர்ந்த பார்பனர்கள் அவரை தம்முடன் இணைத்துக்கொள்ள மறுத்தும் பார்பன சமூகத்தால் தன் பார்பன அந்தஸ்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பகீரதப் பிரயத்தனங்கள் செய்த்தார்.
ஞானி ஏசுநாதரும் அப்படித்தான், ''தர்மாத்மா'' என்று அவரைப்பற்றி ஒரு திரைப்படம் வந்துள்ளது, அதில் தீண்டதகாதோருடன் உண்டு குடிக்கவும் அவர்களைத் தொடவும் துணிச்சல் பெற்ற வீரராக அவர் காட்டப்படுகிறார், ஆனால் அவர் அப்படி செய்தது சாதியையும் தீண்டாமையையும் எதிர்த்து அல்ல, ஆனால் உண்டாகும் தீட்டினை கங்கா நதியின் புனித நதியில் கழுவி போக்கிக்கொள்ள முடியும் என்றுதான்.
''ஏசுவோ'' ''நபியோ'' ''பகவானோ'' - இவர்கள் சாதியையோ, தீண்டாமையையோ எதிர்த்தவர்கள் அல்ல.''
என் ஆராய்ச்சியில் தெரிந்தவரை ஞானிகள் ஒரு போதும் சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிராக இயக்கம் நடத்தியவர்கள் அல்ல, மனிதருக்கிடையிலான போராட்டம்மீது அல்ல அவர்களது கவனம், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவின் மீதே அவர்கள் கவனம், எல்லா மனிதர்களும் சமம் என்று அவர்கள் போதிக்கவில்லை, கடவுளின் திருமுன் எல்லோரும் சமம் என்றே போதித்தார்கள், இது முதலில் சொன்னதில் இருந்து மிகவும் மாறுபட்டதும் அறவே ஆபத்தில்லாததும் ஆனா நிலைபாடாகும், இதைப்போதிப்பதில் யாருக்கு கஷ்டமில்லை, நம்புவதில் ஆபத்துமில்லை.
ஞானிகளின் போதனைகள் பயனற்றதாகிப் போனதற்கு இரண்டாவது காரணம் சாதியை ஞானிகள் மீறலாம், பொதுமக்கள் மீறக்கூடாது என்று பொது மக்களுக்குச் சொல்லப்பட்டு இருப்பதுதான், எனவே ஞானிகளின் வழியில் நடக்க ஒருபோதும் முடியாது.
ஞானி எப்போதும் வழிபடதகுந்த புனிதர், மக்கள் எப்போதும் சாதியையும் தீண்டாமையையும் தீவிரமாக நம்பி கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள், இது எதை காட்டுகிறது? ஞானியின் புனிதமான வாழ்க்கையும் அருமையான போதனையும் மக்களின் வாழ்வையும் நடத்தையையும் சாஸ்திரங்களின் வழியிலிருந்து மாற்றவில்லை, எனவே படித்த சிலரைவிடவும் பாமரரான பலரைவிடவும் வித்தியாசமான முறையில் சாஸ்திரங்களை புரிந்துகொள்ளும் பல ஞானிகள் இருந்தார்கள்.
ஒரு மகாத்மா இருக்கின்றார் என்கிற விஷயம் எந்த ஆறுதலையும் தருவதில்லை, சாஸ்திரங்களை மக்கள் வித்தியாசமான முறையில் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை, இதை கணக்கில் கொண்டே ஆகவேண்டும், இதற்கு மக்களின் நடத்தையை தொடர்ந்து ஆட்சி செய்யும் சாஸ்திரங்களின் அதிகாரத்தைக் கண்டனம் செய்தே தீரவேண்டும்.
வேறு எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்பதை மகாத்மா சிந்திக்கவில்லை, சாஸ்திரங்களின் போதனைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் பயனுள்ள வழியாக மகாத்மா எந்த திட்டத்தை முன்வைத்தாலும் ஒரு நல்ல மனிதனின் தூய வாழ்க்கை அவனுக்கு மட்டுமே பயன்பட முடியும் என்பதை அவர் ஒத்துகொண்டாக வேண்டும்.
ஆனால் இந்தியாவிலோ புனிதர்களையும் மகாத்மாக்களையும் வழிபடுவது - ஆனால் அவர்களின் வழி நடப்பதில்லை என்கின்ற போக்கு சாமானியர்களிடம் இருப்பதால் அவருடைய திட்டத்தால் பெரிய பலன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
*********
மகாத்மா முன் வைக்கும் மூன்றாவது வாதம், சைதன்யரும் ஜெயந்தேவும் துக்காராமும் திருவள்ளுவரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் போன்றவர்கள் கடைபிடித்த ஒரு மதம் நான் கூறியது போல் தகுதியற்றதாக இருக்க முடியாது,
ஒரு மதத்தை அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணத்தை கொண்டு மதிப்பிட வேண்டுமேதவிர அது உருவாக்கிய மிக மோசமான உதாரணங்களை கொண்டு மதிப்பிடக் கூடாது என்பதாகும்.
இந்த வாசகத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுகொள்கிறேன், ஆனால் இதை கூறுவதன் மூலம் அவர் எதை நிருபவிக்க விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை, ஒரு மதத்தை நல்ல உதாரணங்களை கொண்டே மதிப்பிட வேண்டும் மோசமான உதாரங்களை கொண்டு அல்ல என்று கூறிவிட்டாலே விஷயம் முடிந்துவிடுமா-? அப்படி இருக்க முடியாது என்றே கருதுகிறேன், பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.
அந்த மோசமான உதாரணங்கள் ஏன் மிக அதிக எண்ணிக்கையிலும் நல்ல உதாரணங்கள் மிகக் குறைந்தும் காணப்படுகின்றன-? இந்த கேள்விக்கு பதில் இருக்க முடியுமா-?
1. அந்த மோசமான மனிதர்கள் தம் இயல்பிலேயே வக்கிரபுத்தி படைத்தவர்கள், சாஸ்திரங்களை கற்பதற்கு தகுதியற்றவர்கள், எனவே அவர்கள் மத லட்சியத்தை நெருங்கவே முடியாமல் இருப்பவர்கள்.
2. மத லட்சியமே முற்றிலும் தவறானது, பெரும்பான்மையரின் வாழ்க்கையில் ஒரு தவறான போக்கை ஏற்படுத்தியதற்கு அதுவே காரணம், நல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு இந்த தவறான லட்சியத்திற்கு எதிரான நிலைபாட்டை அவர்கள் மேற்கொண்டதே காரணம்.
இந்த இரண்டு விளக்கங்களில் முதல் விளக்கத்தை நான் ஏற்கத் தயாரில்லை, மகாத்மாகூட இதை ஏற்க மாட்டார் என்றே நினைக்கிறேன், மூன்றாவது ஒரு விளக்கத்தை மகாத்மா தராதவரை என்னைப் பொறுத்து இரண்டாவது விளக்கமே தர்க்கரீதியானதும் அறிவுப் பூர்வமானதும் ஆகா இருக்கின்றது.
இரண்டாவது விளக்கமே ஒரே சரியான விளக்கம் என்றால் ஒரு மதத்தை அதில் உள்ள நல்ல உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்கின்ற மகாத்மாவின் வாதம் நம்மை எங்கே இட்டுச்செல்லும்-? தவறிப்போன பெரும்பான்மையர் தவறான லட்சியத்தை மேற்கொண்டதால் தான் அப்படி ஆனார்கள் என்று அவர்கள் மேல் பரிதாபப் படுவதற்கே தவிர வேறெதற்கும் இட்டுச்செல்லாது.
**************************
********************* தொடரும்.
நூல் - சாதி ஒழிப்பு.
எழுதியவர் - புரட்ச்சியாளர் டாக்டர் B .R அம்பேத்கார்
ஆண்டு - ''அரிஜன்'' இதழ் - 15-08-1936
பக்கம்- 151,152,153,154,155.
நன்றி;-
வெளியீடு - அலைகள் பதிப்பகம், 1998
மொழியாக்கம் - வெ. கோவிந்தசாமி.